ராஜிதவுக்கு எதிரான சீ.ஐ.டீயிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் வாக்குமூலம்

313 0

மாலபே – நெவில் பெர்ணாண்டோ  தனியார் வைத்தியசாலைக்கு  அரச நிதி செலவிடப்பட்டதான குற்றச்சாட்டு தொடர்பில்  வாக்குமூலம் அளிப்பதற்காக  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவில்  ஆஜராகியிருந்தனர்.

அவர்களிடம்  காலை 10 .15  மணிதொடக்கம் சுமார் மூன்று  மணிநேரம் விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நெவில்  பெர்ணாண்டோ தனியார் வைத்தியசாலையை  அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டதாக அமைச்சர் ராஜித  சேனாரத்ன  கூறிக்கொண்ட போதிலும்  இதுவரையில்  அந்த வைத்தியசாலை தனியார்  வைத்திய சாலையாகவே  இயங்கி  வருகின்றது.

இது தொடர்பில் அமைச்சர்  ராஜித சேனாரத்னவிற்கு எதிராக  சட்ட நடவடிக்கை  எடுக்க கோரி அரசாங்க வைத்திய அதிகாரிகள்  சங்கத்தினர்  கடந்த மாதம் 11ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில்  முறைப்பாடு  செய்திருந்தனர்.

இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு  பிரிவினரின்  அழைப்பை அடுத்து இது தொடர்பில் சாட்சியம்  அளிப்பதற்காக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  செயலானர்  ஹரித அளுத்கே  தலைமையிலான  குழுவினர்  குற்றப்புலனாய்வு  பிரிவில்  ஆஜராகியிருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே  கூறியதாவது;

மாலபே – நெவில்  பெர்னாண்டோ  வைத்தியசாலையை   அரசாங்கம்  பொறுப்பெற்றுள்ளதாக அமைச்சர் ராஜிதசேனாரத்ன கூறிக்கொண்ட போதிலும் அந்த  வைத்திய  சாலை  தனியார்  வைத்தியசாலையாகவே  இயங்குகின்றது. சுகாதார  அமைச்சின்  செயலாளர் வசந்த  பெரேரா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்டமையின் ஊடாக  இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வைத்தியசாலைக்காக மக்களுடைய வரிப்பணமே  இதுவரையில் செலவிடப்பட்டு  வருகின்றது. ஆகவே ,இது  தொடர்பில்  கவனம்  செலுத்தி உரிய  நடவடிக்கைகளை  எடுக்குமாறு கோரி ஆதார பூர்வமாக  குற்றப்புலனாய்வு  பிரிவு  உள்ளிட்ட   11  அமைப்புக்களில் முறையிட்டுள்ளோம்.

இந்த நிலையில் , அந்த விடயம் தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்கு வருமாறு  குற்றப்புலனாய்வு  பிரிவினரிடத்திலிருந்து எமக்கு  அழைப்பு  கிடைக்கப்பெற்றிருந்தது. அதற்கமைய எம்மிடம் மூன்று  மணிநேரம் வாக்குமூலம்  பதிவு  செய்யப்பட்டது.

இந்த வைத்தியசாலையை  அரசாங்கம் பொறுப்பேற்று கொண்டுள்ளதாக  சுகாதார அமைச்சர் கூறிய பின்னரும் நெவில் பெர்ணாண்டோ  அந்த வைத்திய  சாலையை  விற்பதற்கான  விளம்பரமொன்றினை  வெளியிட்டிருந்தார்.

ஆகவே ,இது தனியார் வைத்திய சாலையாக இயங்குகின்றதா ? இல்லை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக என்ற சந்தேகம்  எழுந்துள்ளது.

இது தொடர்பிலான உண்மைத்தன்மையை கண்டிறியுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினரிடத்தில் கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை , இந்த  விசாரணைகளின் போதான  தகுந்த ஒத்தழைப்பை  குற்றப்புலனாய்வு  பிரிவினருக்கு  வழங்க  தயாராகவுள்ளோம்  என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.