மரணதண்டனை அமுலாக்கத்தை இரத்து செய்ய நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்படும் தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.
மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், நிறைவேற்றும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் எவ்வாறாயினும், மிக விரைவில் மரண தண்டனையை நிறைவேற்றதான் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றங்களினால் குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு ஜனாதிபதியும் கையெழுத்திடவில்லை.
இந்த நிலையில், 43 வருடங்களின் பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.
அவரது இந்த நிலைப்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான வரைவு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

