பாராளுமன்ற வளாகத்தில் இன்று கூடவிருந்த பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் மீண்டும் 24 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இன்றைய தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த விசாரணையாளர்கள் சிலர் வெளிநாட்டு விஜயத்தில் இருப்பதாலும் சிலர் விசாரணை அமர்வுகளுக்கு வர முடியாத வேறு காரணங்களை கூரியுள்ளதனாலும் இன்றைய தெரிவுக்குழு அமர்வுகளை நிறுத்த குழு தீர்மானம் எடுத்துள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்களை அழைத்து விசாரணை நடத்தி அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அமர்வுகள் இன்றைய தினம் காலை 9 மணிக்கு கூடும் என கடந்த அமர்வுகளின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்றைய அமர்வுகளுக்காக தெரிவுக்குழு முன்னிலையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் பணிப்பாளர் வருண ஜெயசுந்தர, அரச புலனாய்வு பிரிவு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன , குற்றவியல் விசாரணை திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தரங்க பதிரன ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் இவர்களில் சிலர் வெளிநாட்டு விஜயத்தில் இருப்பதாலும், பொலிஸ் அதிகாரிகள் சிலர் வர முடியாத சூழ்நிலையில் இருப்பதாலும் இன்றைய தெரிவுக்குழு அமர்வுகளை எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்க தெரிவுக்குழு கூடி தீர்மானம் எடுத்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் அரச அதிகாரிகளை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துவதாகவும் அடுத்த அமர்வுகளில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய சிலரை விசாரணைக்கு அழைத்து அடுத்த மாதம் இறுதிக்குள் தெரிவுக்குழு அறிக்கையை முழுமைப்படுத்தி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

