குடிமராமத்து திட்டத்தில் தவறு நடந்தால் நடவடிக்கை சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்!

340 0

குடிமராமத்து திட்டத்தில் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் (பெருந்துறை தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம்:- தி.மு.க. ஆட்சியில் ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் கடலை தூர்வார ஆர்வம் காட்டினார்கள். அன்றைக்கு ஏரிகளை முறையாக தூர்வாரியிருந்தால் இன்றைக்கு தண்ணீர் பிரச்சினை வந்திருக்காது.

தி.மு.க. உறுப்பினர் பிச்சாண்டி:- சேது சமுத்திர திட்டம் என்பது அறிஞர் அண்ணாவின் கனவு திட்டம். அந்த திட்டத்தை குறைசொல்லக்கூடாது. அண்ணாவின் திட்டத்தை உறுப் பினர் குறைசொல்லலாமா?.

உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம்:- நான் திட்டத்தை குறைசொல்லவில்லை. கடலை தூர்வார காட்டிய ஆர்வத்தை ஏரிகளை தூர்வார காட்டியிருக்கலாமே என்று தான் சொன்னேன்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:- சோழர்கள் காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெட்டப்பட்ட கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்து வந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் தான் அவைகளை தூர்வாரினோம். தூர்வாருவதில் தி.மு.க. டாக்டர் பட்டமே வாங்கியிருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 ஆயிரம் ஏரிகளில் 14 ஆயிரம் ஏரிகள் பொதுப்பணித்துறை வசம் உள்ளது. இந்த ஏரிகளை தூர்வார குடிமாரமத்து திட்டம் தொடங்கப்பட்டது. 2016-2017-ம் ஆண்டில் குடிமராமத்து திட்டத்துக்காக முதலில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக 1519 ஏரிகளை தூர்வார திட்டமிட்டு, 1513 ஏரிகள் தூர்வாரப்பட்டன. பாசனதாரர்கள் சங்க பிரச்சினையால் 6 ஏரிகளை தூர்வார முடியவில்லை. 2017-2018-ம் ஆண்டில் இந்த திட்டத்துக்காக ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டது. 1511 ஏரிகளை தூர்வார திட்டமிட்டு, 1406 ஏரிகள் தூர்வாரப்பட்டன.

2019-2020-ம் ஆண்டில் 1891 ஏரிகள் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.499 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணியை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் நேரடியாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

துரைமுருகன்:- முதல்-அமைச்சரின் கருத்தை வரவேற்கிறேன். திட்டத்தை செம்மையாக செயல்படுத்த நாங்கள் விரும்புகிறோம். எங்கள் தொகுதியில் உள்ள 8 ஏரிகளை நாங்கள் தான் தூர்வாருவோம் என்று அ.தி.மு.க.வினரே பிரச்சினையில் ஈடுபடுகின்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- அரசியல் குறுக்கீடு இருக்கக்கூடாது என்று தான் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். பணியை மேற்கொள்ளும் பதிவுபெற்ற பாசனதாரர்கள் சங்கத்தின் வங்கிக் கணக்கில் பணம் வரவு செய்யப்படுகிறது. தவறு நடந்ததை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.