ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

301 0

தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் வேலாயுதம் உள்ளிட்டவர்கள் தங்களது ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேருடன் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி தென்காசியில் நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 10 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நமது வீட்டில் உள்ளவர்கள் பிரிந்துசென்று, அவர்கள் மீண்டும் நம்மை சந்தித்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவோமோ? அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆட்சி, கட்சியை அழித்துவிடலாம் என்று சிலர் கனவு கண்டனர். அவர்களுக்கு இந்த இணைப்பு விழா ஒரு பெரிய பாடமாக இருக்கும்.
தி.மு.க.வுக்கு இந்த கழகத்தை அடகு வைத்துவிடலாம் என்று சிலர் நினைத்தார்கள், அது நடைபெறவில்லை. ஒரு தொண்டன் கூட இந்த கழகத்தில் இருந்து செல்லவில்லை. இந்த கழகத்தில் பிரிந்து சென்றவர்கள் எல்லாம் தாய் கழகத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் தான் இந்த இணைப்பு விழாவுக்கு கிடைத்த பரிசாகும். தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். ஆட்சியில் இல்லாதவர்கள் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். அவர்கள் பெற்றது உண்மையான வெற்றி அல்ல.
அப்போதும் கூட நாம் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி உண்மையை சொல்லி இடைத்தேர்தலில் 9 தொகுதிகளிலும், தேனி நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளோம். நாம் பெற்றது தான் உண்மையான வெற்றி.
இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்.எல்.ஏ.க்கள் எதிராக செயல்பட்டனர். அப்படி இருந்தும் இடைத்தேர்தலில் 9 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து, மக்கள் பணியாற்றி வருகிறோம். இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு சாவுமணி அடித்துள்ளோம்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் சொன்னார். அவர் சொன்ன ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாது. ஆனால் அ.தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றக்கூடியது. ஜெயலலிதாவின் அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனை கூட பிரித்துக்கொண்டு போகமுடியாது. ஆனால் 3 கட்சிக்கு போன ஒருவர் தி.மு.க.வில் போய் இருந்துகொண்டு நம்மை பற்றி குறை சொல்கிறார். அந்த கருப்பு ஆடுக்கு நாம் தெளிவான பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க. சுத்தமான தெளிந்த நீரோடையாக உள்ளது.
தமிழகத்தில் வாரிசு அரசியல் நடத்துகிறார்கள். தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். அவரது மகன் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக உள்ளார். தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அவர்கள் குடும்ப ஆட்சி தான் நடத்துவார்கள். ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி இல்லை, சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சராகலாம்.
இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால் இந்த அரசு தொடர்ந்து 3 ஆண்டாக நடக்கிறது. தொடர்ந்து அடுத்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.
ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தோம். அது தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த தொகையை ஓரிரு மாதங்களில் வழங்குவோம். நாங்கள் சொல்கிற திட்டத்தை தான் செய்வோம். தி.மு.க. ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் கொடுக்கவில்லை.
தி.மு.க. ஆட்சியில் 32 சதவீதமாக இருந்த உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 48.6 சதவீதமாக உயர்ந்து உள்ளது. கல்வியில் தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது. வறட்சி ஏற்பட்டாலும் விலைவாசி உயர்வு இல்லாமல் பார்த்துக்கொண்டோம். மத்திய அரசு, மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறது. தென்காசியை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் அமைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது.