கல்கிஸை பிரதேசத்தில் மத்திய தபால் பரிவர்த்தனை நிலைய அதிகாரிகளால் ரூபா 27 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதை மாத்திரைகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் 57 வயதுடைய கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மிகவும் சூட்சுமமான முறையில் ஒலிபெருக்கிக்குள் மறைத்து பெல்ஜியத்திலிருந்து தபால் பொதி சேவையூடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதே இப் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் சுமார் 5500 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததோடு, அவற்றின் பெறுமதி 27.5 மில்லியன் ரூபா என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை சந்தேகநபர் போதைமாத்திரைகள் அடங்கிய ஒலிப்பெருக்கியை எடுத்துச் செல்லும் நோக்குடன் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு வந்திருந்த போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தினருடன் இணைந்து சுங்கத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

