எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள் சிறப்புக்கட்டுரை -சிவசக்தி

591 0

யூலை 5….

எங்கே வாழ்ந்தாலும் ஈழத் தமிழினத்தவர்கள் நினைவிற் பதித்து நெஞ்சிற் கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் முதன்மை பெறுகின்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் தான் தமிழினத்தின் மிகப்பெரும் பலமான கரும்புலி வடிவத்தை தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் உலகின்முன் எடுத்துக்காட்டினார்.

1987 மே மாதத்தில் இலங்கை அரசு நடத்திய, ஒப்பறேசன் லிபறேசன் என்ற மிகப்பெரிய இராணுவநடவடிக்கைதான், இத்தகையதோர் வடிவத்தை தேசியத்தலைவர் உருவாக்குவதற்கு வழிவகுத்தது. யாழ்குடாநாட்டில் அரசபடையினர் பயணிக்க அச்சங்கொள்ளுமளவிற்கு விடுதலைப் போராளிகளின் மறைந்திருந்து தாக்கும் கெரில்லாத் தாக்குதல் வடிவம் வளர்ச்சியுற்றிருந்தது. படையினர் உளரீதியாக தளர்வடையத்தொடங்கியிருந்தனர். எனவேதான் அன்றைய ஐனாதிபதியாகவிருந்த. ஜே .ஆர். ஐயவர்த்தன, படையினரை உளவலுப்படுத்த எண்ணினார்.

இலங்கைத்தீவிலிருந்து தமிழினத்தவர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க பல பேரினவாதிகள் வரிசைகட்டி நின்றாலும், துளியளவும் ஈவிரக்கமற்ற இனவாதியாக தன்னை தமழினத்தவர்களின் நெஞ்சிற் பதித்தவர் அன்றைய ஐனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஐயவர்த்தன. தன்னுடைய ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்போராளிகளையும், அவர்களைத் தாங்கிநிற்கும் தமிழினமக்களையும் துடைத்தழிக்க நினைத்தார் அவர்.

இதற்கமைய இஸ்ரேல், சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பேருதவியோடு தமிழினத்தின்மீது படையெடுப்பொன்றைத் திட்டமிட்டார் ஐயவர்த்தன. இந்த நடவடிக்கைக்காக தன்னுடைய இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறப்புப்பயிற்சி பெற்றுக்கொள்ளச் செய்தார். அத்தோடு, தமிழர்கள் மிகச்செறிந்துவாழும் யாழ்குடாநாட்டின்மீது பொருளாதாரத்தடையையும் விதித்தார்.

இவ்வாறு நன்கு திட்டமிட்டு, மிகப்பெரிய படையெடுப்பொன்றை வடமராட்சிமண்ணில் தொடக்கினார். இந்த நடவடிக்கைதான் “ஒப்பரேசன் லிபரேசன்” என்கின்ற இராணுவ நடவடிக்கை. இதன்மூலம் வடமராட்சிப் பிரசேத்தை இராணுவத்தின் கைக்குள் கொண்டுவந்து, விடுதலைப்புலிகளையும் மக்களையும் திகிலடையச் செய்து, பின்னர் அங்கிருந்து யாழ்குடாநாட்டின் தரைப்பகுதிகளை கைப்பற்றிவிடலாம் என்பதே ஐயவர்த்தன கண்ட கனவாகும்.

1987 மே 26 ஆம் நாளன்று, அரசவிமானங்களும், கடற்படைக் கப்பல்களும் வடமராட்சிப்பகுதிமீது தாக்க, அதேநேரத்தில் தரைவழியாக இராணுவம் எறிகணைகளை வீசியபடியே முன்னேறத்தொடங்கியது.

மக்கள் குடியிருப்புகளே அதிகமாக இலக்குவைக்கப்பட்டதால், உயிரிழப்பும், உடைமைகள் இழப்பும், காயமும் என மக்கள் சொல்லொணாத்துயர் சுமந்தனர். பலநாடுகளின் உறுதுணையோடு நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு தற்காப்பு தாக்குதல்களை தொடுத்தவாறு போராளிகளும் இழப்புகளுடன் போர் உத்திமுறைக்கு அமைவாகப் பின்வாங்கினர். வடமராட்சி பிரதேசம் பேரழிவுக்குள்ளானது. மக்களின் உடைமைகள் எல்லாம் அழிவுற்றன.

வடமராட்சியைக் கைப்பற்றிய இராணுவம், அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைக்காக நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் தமது பெரும் படைத்தளமொன்றை நிறுவியது. மாணவர்களின் அறிவை விருத்திசெய்யும் பாடசாலையில் இருந்துகொண்டு யாழ்குடாநாட்டின்மீது படையெடுப்பு நிகழ்த்துவதற்குரிய அனைத்தையும் இராணுவதரப்பு செய்துகொண்டிருந்தது.

விடுதலைப்புலிகள் அச்சமுற்று ஓடிவிட்டார்கள். இராணுவம் பெருஞ்சாதனை படைத்துள்ளது என்கின்ற தோற்றத்தை காட்டி, ஐயவர்த்தன இறுமாந்திருந்தார். இந்தவேளையில் தான், அப்போது பலவீனமான நிலையிலிருந்த தமிழினத்தின் பலம்மிக்க கருவியாக, கரும்புலிகள் என்னும் வடிவத்தை தேசியத்தலைவர் அவர்கள் தேர்ந்தெடுத்தார். குறைந்த இழப்போடு, எதிரிக்கு உச்சப் பேரிழப்பைக் கொடுக்கக்கூடிய பொறிமுறையாக அதை தேசியத்தலைவர் அவர்கள் எண்ணினார்.

தனது எண்ணத்தை தேசியத்தலைவர் அவர்கள் போராளிகளிடம் முன்வைத்தபோது, இந்தத்தாக்குதலை நானே செய்கிறேன் என வல்லிபுரம் வசந்தன் என்கின்ற போராளி மில்லர் தானாகவே முன்வந்தான். மில்லர் வடமராட்சிப் பிரதேசத்திற் பிறந்து, அப்பிரதேசத்தை நன்கறிந்தவன். அதுமட்டுமன்றி, இராணுவம் குடிகொண்டிருந்த நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தின் மாணவனாகவும் இருந்தவன். எனவே இத்தாக்குதலை மில்லர் செய்வது மிகப்பொருத்தமானது என தேசியத்தலைவர் அவர்கள் தீர்மானித்தார்.

இதன்படி, நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர்மீது, 1987 யூலை 5 ஆம்நாள் நள்ளிரவு முதலாவது கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டியை இராணுவ முகாமுக்குள் செலுத்தி, தன்னை உயிர்வெடியாக்கி வெடிக்கச்செய்த மில்லர், தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் முதலாவது கரும்புலியாக, கரும்புலி கப்டன் மில்லராக நிலைபெறுற்றான்.

மில்லரின் ஒப்பற்ற இந்த ஈகம்தான், இறுமாப்போடு இருந்த, இலங்கையின் அன்றைய ஐனாதிபதி ஐயவர்த்தனவை இந்திய அரசிடம் மண்டியிடவைத்தது. இலங்கை அரசுக்கு முட்டுக்கொடுக்க வந்த இந்திய அமைதிப்படையினரையும் வென்ற வரலாறு எமக்குரியது. எமது விடுதலைப் போராட்டப் பயணிப்பில் நிகழ்ந்த அனைத்து திருப்புமுனைகளுக்கும் பின்னால் வெளித்தெரியாவேர்களாக பல கரியவீரர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.

1987 யூலை 5 ஆம்நாள் ஒலித்த அந்தப்பெருவெடியோசை வடமராட்சிப்பிரதேசத்தை மட்டுமல்ல, தமிழினத்தை முற்றாக அழித்தொழித்துவிட நினைத்த ஐயவர்த்தனவின் நெஞ்சையும் அதிரச் செய்தது.

அன்று கரும்புலி கப்டன் மில்லர் தலைவனின் நெஞ்சுக்கூட்டிற்குள்ளிருந்து அக்கினிக்குஞ்சாக புறப்பட்டு, தன்னுயிரை வெடியாக்கி வீரவரலாற்றைப் படைத்தான். அவன் வாழ்வை வெறுத்துப் போகவில்லை, தன் இனத்தினமீது கவிந்த இருளை எரிக்கவே கரியநெருப்பாகினான். அன்று அவன் தாங்கிச்சென்ற வடிவத்தை, அவனைத்தொடர்ந்து, எண்ணற்ற கரும்புலிகள் ஆண்களும் பெண்களுமாய் தரையிலும் கடலிலும் வான்மூலமும் நடத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தார்கள்.

மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பமாகியது, என்றுமே உலகம் கண்டிராத எண்ணிப்பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமழீழத்தில் உருவாகியது| என தலைவர் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். தமிழினத்தின் தாயகமண் மீட்புப்போராட்ட முன்நகர்விலே, தடைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டபோதெல்லாம் தங்கள் உயிர்களை வெடியாக்கி, தடைகளைத் தகர்த்தெறிந்து தலைவனுக்கு தோள்கொடுத்து நின்றவர்கள் கரும்புலிகள்.

தாயகப்பகுதிகளில் மட்டுமல்லாது தாயகம்தாண்டி எதிரிகளின் குகைகளுக்குள்ளும் நுழைந்து வரலாறான வரலாறுகள் இவர்கள். ஆணென்றும் பெண்ணென்றும் நிலவிய பேதங்கள் கடந்து, பெருவரலாறானவர்கள் இவர்கள். எம்மினம் உயிர் வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, படுகொலைசெய்யப்படுவதை கண்டு ஆற்றாமலே இவர்கள் பெருந்தழலாய் புறப்பட்டார்கள். இவர்களில் சமுகத்தின் பழைமைவாத கருத்துநிலைகளை உடைத்தெறிந்து கடலேறி கரியவடிவெடுத்து வரலாறான பெண்களும் அடங்குவர்.

தலைவனின் கனவைச்சுமந்தபடி, கரிய இருளிலும், பேரலைகள் புரண்டடிக்கும் கடலிலும், எதிரி சுட்டுவீழ்த்தலாம் எனத்தெரிந்த வான்பரப்பிலும், எல்லாவற்றையும் தாண்டி பிரளயத்தை நிகழ்த்த துடிக்கும் கருங்காற்றாய் எதிரிகளின் நடுவிலும் உயிர்வெடியாகச் சென்று, தாயக விடுதலைக்கு வலுச்சேர்த்தவர்கள் இவர்கள்.

வெல்லப்பட முடியாதது என எதிரிப்படைகள் இறுமாந்திருந்த எத்தனையோ படைத்தளங்களை வென்று, வெற்றிமுரசறைவதற்கு அத்திவராமிட்டவர்கள் இந்த நெருப்பு மனிதர்கள். எமது போராட்டத்தை வளர்ச்சியுறவிடாது, பயணப்பாதையில் பெருந்தடைகளாக, கால்களுக்குமுன் கருங்கல்லாகக் கிடந்த பல தடைகளைத் தம்முயிர்கொண்டு தகர்த்து, விடுதலைப் பயணத்தை முன்நகர்த்திய உன்னதங்கள் இவர்கள். தற்புகழுக்காகவோ அன்றி தன்னலத்துக்காகவோ எரிமலையாகவில்லை இவர்கள். பிறந்து வாழ்ந்து மரணிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஈற்றில் கிடைப்பது ஆறடிநிலம். அதைக்கூட ஒறுத்து, அடுத்த தலைமுறைக்காய் உயிர்கொடுத்தவர்கள் இவர்கள். எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டாய் முதற் புள்ளியிட்டவன் கரும்புலி கப்டன் மில்லர்.

தன்னுடைய தாயகத்தில் தான்பிறந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, கும்மாளமிட்டுச்சிரித்த எதிரிகளை மில்லரால் பார்த்திருக்க முடியவில்லை. தான் படித்த பாடசாலையை எதிரிகள் கைப்பற்றி, அங்கிருந்து தன்தாயகத்தை முழுவதுமாக அழிக்கத் திட்டமிடுவதை மில்லரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவனுக்குள் அக்கினிப்பிளம்பு உருக்கொண்டது.

சாவுக்கு நாள் குறித்துவிட்டு, பெற்றெடுத்த தாயுடனும், ஒன்றாய் நின்ற தோழர்களுடனும், ஊட்டி உயிராய் அணைத்த மக்களுடனும் கூட எதுவும் தெரியப்படுத்தாமல், தலைவனுடன் மட்டுமே உணவுண்டு, சிரித்தபடி விடைபெற்றுச் சென்றவர்கள் இவர்கள். தேசத்தின்மீதான பற்றுணர்வும், தம்மினத்தின்மீதான பற்றுறுதியும், ஆழமான கருணையுள்ளமும் கொண்ட இவர்கள், தமிழினத்தை அழிப்பவர்களின் மீது பெருநெருப்பாய் பாய்ந்தவர்கள்.

இவர்கள் யாரும் வாழமுடியாமலோ வாழ்வைவெறுத்தோ போராடப் புறப்பட்டவர்களல்லர். தங்களின் இனத்து மக்களை, உறவுகளை சிங்களப்பேரினவாதம் துரத்;தியடித்ததையும் துடிக்கத்துடிக்கப் படுகொலை செய்ததையும் பார்த்து, இந்த துன்பதுயரங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க தாமாகவே விடுதலைப் பயணத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள். தம்மை கொடையாக்கி தம்மினத்தை வாழவைக்கத் துடித்தவர்கள். உலக அரங்கில் ஈழத்தமழிழினத்திற்கு ஓர் அடையாளம் நிலைத்திருப்பதற்கு இவர்கள் எல்லோரும் செய்திருக்கின்ற ஒப்பற்ற ஈகமே காரணமாயுள்ளது.

தம்முடைய விடுதலைக் கனவையும். உணர்வையும் தமக்குப்பின்னால் உள்ளவர்கள் செயற்படுத்துவார்கள் என்கின்ற நம்பிக்கையோடு, கையசைத்து காற்றில் கரைந்தவர்கள். இவர்கள் செய்த ஒப்பற்ற உயிர்க்கொடை எதற்கானது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இவர்களால் நடத்தப்பட்ட குறிப்பிடக்கூடியளவு தாக்குதல்கள் அரசியலிலும், இராணுவநோக்கிலும், உத்திமுறையிலும் உரிமைகோரப்படாதவையாக உள்ளன. இதற்காக தம் முகத்தையும், முகவரியையும் மறைத்து செயற்பட்டவர்கள் இவர்கள். தங்களை ஒறுத்த இந்த நெருப்புமனிதர்களின் எழுச்சி, பல்வேறு அரசியற்பரிமாணங்களை உற்பவித்திருக்கின்றது. உள்ளே தெரிந்தவர்களாகவும், வெளியே தெரியாதவர்களாகவும் இவர்கள் தம்மை உருக்குலைத்து எழுதிய வரலாறு தூய்மையானது. தன்னலத்தையும், தாம் என்கின்ற ஆணவத்தையும் பதிக்கத்துடிக்கும் இன்றைய பொய்யான மனிதர்கள்பலரின் நடுவே, மெய்யாகவே தேசத்தின் விடிவுக்காக வெறுமனே கரியநிழலுருவக்களாக காலமெல்லாம் வாழ்பவர்கள் இவர்கள்.

எமது இனத்தின் மகிழ்வான , சுதந்திரமான, வளமான எதிர்கால வாழ்விற்விற்காக தங்களை நொடிப்பொழுதில் வெடியாக்கிய இவர்களின் வீரத்தையும், வரலாற்றையும் எமது தலைமுறைதாண்டி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்கவேண்டிய கடப்பாடுடையவர்கள் நாங்கள். உலகின் மூலைமுடுக்கெங்கும் பரந்துவாழும் ஒவ்வொரு தமிழனும் தனது குழந்தைக்கு, தனது குழந்தையின் குழந்தைக்கு சுதந்திரமாகவாழ ஒரு தாய்நாடு அவசியம் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். எமது அடுத்த தலைமுறையினர் கைகளில் கைகளிலும் மனங்களிலும் அடிமை விலங்கற்று சுதந்திரமாய் வாழவேண்டும். இதற்காகவே இன்றைய நாளுக்குரியவர்கள் தம்முயிரை வெடியாக்கி, தனி வரலாறாகினார்கள். இவர்களுக்கு ஒருபோதும் மரணமில்லை. இதனால்தான் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள், ‘ இலட்சியவீரர்கள் இறப்பதில்லை’ என மொழிந்திருக்கின்றார்.

தம்மைத் தற்கொடையாக்குவதற்கு முன், இவர்கள் பெற்றுக்கொண்ட மிகக்கடினமான பயிற்சிகள் மெய்சிலிர்க்கவும் மேனிநடுங்கவும் செய்பவை. தம்மைவருத்தி அனைத்து பயிற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவுசெய்து, கையசைத்தபடியே இருளிற் கரைந்து எம் ஒளியானவர்கள் இவர்கள்.

சின்னஞ்சிறிய முரண்பாடுகளால் மனமுறிவுகளுற்று, எமது இனம் தனித்தனியாக சிதறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், தம்மைவிட தம்தாய்நாடு பெரிதென்றெண்ணிய இந்தவீரப்பிள்ளைகளின் உயரிய எண்ணத்தை மனங்கொள்ள வேண்டும். ஒரு சுடரைஏற்றுவதன் மூலம் இவர்களை அஞ்சலிக்கலாம், ஆனால் இவர்களின் இலட்சியக்கனவை இதயத்தில் சுமந்து தொடர்ந்து அந்த இலட்சியத்துக்காகவே தொடர்ந்து பயணிப்பது தான் இவர்களுக்கான கைமாறாக அமையும்.

திறந்தவெளிச் சிறையாக காட்சிதரும் எமது தாயத்தின் இன்றைய நிலையை தமிழினமோ உலகமோ உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு உத்திகளை பேரினவாத அரசு கைக்கொண்டுவருகிறது. எமது இளையதலைமுறையை பண்பாட்டு சீரழிவுகளுக்குள் சிக்கவைக்கின்றது. ஒருபுறம் , பல்வேறு திசைகளிலும் தமிழ் இளையோரின் கவனம் சிதறடிக்கப்பட்டு வருகின்றது. மறுபுறம் தமிழ்மக்களின் தாயகப்பகுதிகள் சிங்கள மயப்படுத்தப்பட்டுவருகின்றன.

பூமிப்பந்திலே நாம் மிகச்சிறிய தேசமாக இருந்தாலும், மிகப்பெரும் வலிமைவாய்ந்த சக்திமிக்க இனமாக உள்ளோம் என தேசியத்தலைவர் குறிப்பிட்டிருப்பதை மனங்கொள்வோம். தமிழர்கள் என்கின்ற ஒற்றுமையின்மூலமாக இந்த நெருப்புமனிதர்களினதும், மற்றும் மாவீரர்களதும் கனவிற்காக உழைப்போம். இதன்மூலம் எமதுமண்ணின் விடுதலையை விரைவாக்கி எமது அடுத்த தலைமுறையினரை வாழவைப்போம்.

-சிவசக்தி-

நன்றி,தாரகம்.