தமிழகம் புதிய அணை கட்டினால் கர்நாடகம் எதிர்க்காது – டி.கே.சிவக்குமார்

540 0

தமிழகத்தில் புதிய அணை கட்டினால் கர்நாடகம் எதிர்க்காது என்றும், மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடலில் வீணாக கலக்கும் நீரை தடுக்க தமிழகம் புதிய அணை கட்டினால் அதை கர்நாடகம் எதிர்க்காது. எத்தனை அணைகள் வேண்டுமானாலும் அவர்கள் கட்டிக்கொள்ளலாம். அதற்கு கர்நாடகம் ஆட்சேபனை தெரிவிக்காது. ஆனால் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகம் தொந்தரவு செய்யக் கூடாது.
சுப்ரீம் கோர்ட்

நாங்கள் அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ள நீரை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர் மின்நிலையம் அமைக்கும் கர்நாடகத்தின் திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ரூ.400 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றுப்படுகை பகுதிகளில் நல்ல மழை பெய்து, அணைகளுக்கு நீர் வந்தால், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆற்றில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை என்பது குறித்து அந்த ஆணையத்திற்கு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி எந்த பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து மண்டியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

மண்டியா மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிடுவது நமது கர்நாடகத்தின் கைகளில் இல்லை. இதுபற்றி காவிரி மேலாண்மை ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். இனி விவசாயிகள் விரும்பும் பயிர்களை பயிரிட முடியாது. அதற்கான காலம் முடிந்துவிட்டது.

வளர்ந்து நின்றுள்ள கரும்பு மற்றும் நெல் பயிர்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து விவரங்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.