அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் குறித்து எதிர்க்கட்சி போலியான பிரசாரம் – மங்கள

330 0

அமெரிக்காவுடன் அரசாங்கம்  கைச்சாத்திட உத்தேசித்துள்ள  ஒப்பந்தங்களில்  உள்ளடக்கியுள்ள விடயங்கள் குறித்து  போதிய தெளிவில்லாமல் எதிரணியினர் தவறான  பிரச்சாரங்களையே மக்கள் மத்தியில் தமது அரசியல் விளம்பரத்திற்காக முன்னெடுக்கின்றார்கள் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எட்கா, மிலேனியம்   போன்ற  ஒப்பந்தங்கள் கடந்த அரசாங்கத்திலே  அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது  தேசப்பற்றுடன் எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் தற்போது   நாட்டின் மீது அக்கறை   கொள்வது வேடிக்கையாகவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்   அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர் தரப்பினர்  எதிரானவை என்று குறிப்பிட்டு எதிர்க்கும் விடயங்களினால் எவ்வித  பயனும் இதுவரையில் நாட்டுக்கு கிடைக்கப் பெறவில்லை மாறாக பாரிய விளைவுகளே ஏற்பட்டுள்ளது. இன்று நாடு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. பல சதிகள் தீட்டப்படுகின்றது. வேறேந்த நாடும்  எமக்கு எதிராக செயற்படவில்லை. பொதுஜன பெரமுனவினரே  ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் முறையற்ற விதத்தில் இனவாதத்தை தூண்டி விடுகின்றார்கள். குருநாகலை வைத்தியர்  விவகாரத்தை தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தி  இனங்களுக்கிடையில் உள்ள நல்லிணக்கத்தையும், ஒருவர் பிறிதொருவருக்கு வழங்கும் உதவிகளையும் சீர்குலைத்து விட்டனர். எவ்விடயங்களை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டும் என்ற வரைமுறை  எதிரணியினருக்கு கிடையாது.  நாகரீகமாக ஒரு அரசாங்கத்தை  நாட்டு மக்கள்  தேர்ந்தெடுப்பார்களாயின் நாடு சர்வதேசத்தின் அபிப்ராயத்தை முழுமையாக பெறும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.