கடுவலையிலிருந்து கொழும்பு நகர் வரையிலான புகையிரதப் பாதையை அமைக்கும் பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜூலை 03ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவுள்ளதாக பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாணந்துறையில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ரணவக்க மேலும் கூறியதாவது,
கடந்த ஆட்சியாளர்கள் அதிவேக வீதி , விமான நிலைய ங்கள் மேம்பாலங்கள் ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் செய்ற்பட்டதுடன். , அதற்காக அதிகளவிலான நிதியையும் செலவிட்டனர். இருந்த போதிலும் அந்த திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடையவில்லை .அப்போதைய ஆட்சியாளர்கள் தமது சுயலாபத்திற்காகவும் ,தற்புகழ்ச்சிக்காகவுமே இவ்வாறாக வீதி அபிவிருத்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
மக்கள் தாம் சேகரித்த பணத்தை செலவிட்டு கொள்வனவு செய்யும் வாகனங்களில் , நிம்மதியாக பயணிக்க இயலாத நிலையே காணப்படுகின்றது. வாகன நெரிசலும் , காலதாமதமும் அதிகரித்த மட்டத்தில் காணப்படுகின்றது. இத்தகைய போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினூடாக புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய பொது போக்குவரத்த சேவைக்காக பயன்படுத்தப்படும் பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்தை பலப்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
ஒவ்வாருவரும் தனிப்பட்ட வாகனத்தில் பயணிப்பதனால் பெருமளவில் வாகன நெரிசல் மற்றும் காலதாமதம் என்பன ஏற்படுகின்றன. மாறாக பொதுவாகனங்களான பஸ் மற்றும் புகையிரத சேவையை பயன்படுத்துவதனூடாக இந்த நிலைமையை தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அரசாங்கம் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக செலவிடப்படும் நிதியில் ஒரு வீதத்தையேனும் பொதுப்போக்குவரத்து சேவைகளுக்காக செலவிட்டால் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைத்துக்கொள்ளக்கூடியதாகவிருக்கும்.
போக்குவரத்து தொடர்பிலான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக போக்குவரத்து அமைச்சின் உதவியுடன் பாணந்துறை நகரை போக்குவரத்து மத்திய நிலையமாக தெரிவு செய்துள்ளோம். இதேவேளை புகையிரதத் திணைக்களத்தின் உதவியுடன் , புகையிரத சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைய பாணந்துறையிலிருந்து களுத்துறை வரையில் அந்த வேலைத்திட்டங்கள் இடம் பெறவுள்ளன. கட்டுப்பெத்தையில் இலகுவான புகையிரத சேவைக்கான மத்திய நிலையத்தை அமைக்கவும் தீர்மானித்துள்ளோம்.

