இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து கவனம் செலுத்தியிருக்கின்றேன். எனினும் அதன் பின்னர் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சில மதத்தலைவர்களின் வன்முறைகளை அங்கீகரிக்கும் வகையிலான கருத்துக்கள் தொடர்பிலான அறிக்கைகள் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக சிலநடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகும். ஆனால் அவசரகால சட்டமானது மிகவும் குறைவான காலப்பகுதிக்கு மட்டுமே அமுல்படுத்தப்படவேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை பேரவையின் 41 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஆணையாளர் மிச்செல் பச்லெட் இதனைக் குறிப்பிட்டார்.
நீண்ட அறிக்கையை நேற்று பேரவையில் வாசித்த மனித உரிமை ஆணையாளர் பல்வேறு நாடுகள் குறித்து பிரஸ்தாபித்ததுடன் இலங்கை குறித்தும் தனது நிலைப்பாட்டை வெ ளியிட்டார்.
அவர் அங்கு இலங்கை தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் அந்த நாட்டில் பதற்றத்தை அதிகரித்தமை தொடர்பில் நான் கவனம் செலுத்தியிருக்கின்றேன்.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான ஒன்றிணைந்த அணுகுமுறையின் பலவீனமான தன்மையே பாதுகாப்புத் தரப்பினர் அனைத்துப் பிரஜைகளுக்கும் பாதுகாப்பை வழங்கும் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சில முக்கிய மனித உரிமை விடயங்களில் இவ்வாறு மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
எப்படியிருப்பினும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சில மதத்தலைவர்களின் வன்முறைகளை ஊக்குவிக்கும் கருத்துக்கள் என்பன என்னை கவலைகொள்ளச் செய்திருக்கின்றன. இந்த விடயம் சரியான முறையில் கையாளப்படவேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக சிலநடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகும். ஆனால் அவசரகால சட்டமானது மிகவும் குறைவான காலப்பகுதிக்கே அமுல்படுத்தப்படவேண்டும்.
அத்துடன் அரசியல், மதத்தலைவர்களையும் சமூகத்தலைவர்களையும் ஒன்றிணைத்து வன்முறைகள் மற்றும் அநீதிகள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை ஆராய்வதே இங்கு மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது.
அனைத்துவகையான வன்முறைகள் மற்றும் அநீதிகள் தொடர்பில் அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆராயவேண்டியது அவசியமாகும்.
இந்த விடயத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் மிக முக்கிய மற்றும் ஊக்குவிக்கத் தக்க வகையிலான வேலைத்திட்டங்களுக்கு எனது முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

