கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு நலிந்தோர் மருத்துவம், கல்வி உதவி நிதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போட்டு, அதில் கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு, மாதந்தோறும் ஏழை – எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 81 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டு மே மாதத்துக்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
நிதியுதவி பெற்றவர்களின் விவரம் வருமாறு:- சென்னை கோடம்பாக்கம் டைகர் இ.பிலிப். வேலூர் மாவட்டம் அரியூர் டி.ராஜ்குமார். விழுப்புரம் மாவட்டம் சேர்விளாகம் எம்.பழனிகுமார். பெரம்பலூர் எஸ்.பத்மநாபன். சேலம் மாவட்டம் கம்மாளப்பட்டி கே.வி.சேகர். திருப்பூர் சாமுண்டிபுரம் தமிழன் ஆ.சண்முகம். திண்டுக்கல் மாவட்டம் காவேரிசெட்டிப்பட்டி எஸ்.ஆர்.ரெங்கசாமி. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ச.உடையார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

