தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி- குடிநீர் கேன் விலை திடீர் உயர்வு

558 0

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கேன் தண்ணீர் விலையை உயர்த்த தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பருவ மழை பெய்யாததால் தமிழ்நாடு முழுவதும் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் அனைத்து பகுதி மக்களையும் கடும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.

சென்னை நகருக்கு ஒரு நாளுக்கு 1,300 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் வாரியத்தால் 850 மில்லியன் லிட்டர் தண்ணீரைதான் வழங்க முடியும். தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக 500 முதல் 525 மில்லியன் லிட்டர் தண்ணீரையே தினமும் சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது.

நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி தண்ணீர், நெய்வேலி தண்ணீர், திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் ஆகியவற்றின் மூலம் தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பருவ மழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஜோலார்பேட்டையில் இருந்து ரூ.65 கோடி செலவில் சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைகளுக்கு இடையே தண்ணீரை பெறுவதில் புதிய பிரச்சனை உருவாகி இருக்கிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் தண்ணீர் கிடைப்பது குறைந்து வருகிறது. தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தண்ணீரை பெறுவதற்காக மேலும் பல மைல் தொலைவு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக டேங்கர் லாரி தண்ணீர் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. 12 ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி தண்ணீர் முன்பு 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது அது 3 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்ந்து விட்டது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் தனியார் டேங்கர் லாரிகளின் தண்ணீர் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அபாயம் எழுந்துள்ளது.

லாரி தண்ணீர் கிடைக்காத நிலையில் சிலர் கேன் தண்ணீர் மூலம் நிலைமையை சமாளித்து வருகிறார்கள். சென்னையில் குடிநீருக்காக பெரும்பாலானவர்கள் கேன் தண்ணீரையே நம்பி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இந்த கேன் தண்ணீருக்கும் தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து கேன் தண்ணீர் விலையை உயர்த்த தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது 20 லிட்டர் தண்ணீர் கேன் ஏரியாவுக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கேன் தண்ணீர் விலையை ரூ.8 முதல் ரூ. 10 வரை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வை தவிர்க்க முடியாது என்று குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் குடிநீர் உற்பத்தி தொழிற்சாலை 1,627 உள்ளன. சென்னையில் 95 தொழிற்சாலைகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 282 குடிநீர் தயாரிப்பு தொழிற்சாலைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 224 குடிநீர் தயாரிப்பு தொழிற்சாலைகளும் இருக்கின்றன.

சென்னை மக்களுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து அதிகளவு கேன் தண்ணீர் வருகிறது.

20 லிட்டர் கேன் தண்ணீர் தயாரிப்பதற்கு 35 லிட்டர் தண்ணீரை சுத்தம் செய்ய வேண்டியது இருப்பதாக குடிநீர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 20 லிட்டர் தண்ணீர் சுத்தமாக கிடைத்த பிறகு மீதமுள்ள 15 லிட்டர் தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது.

அந்த தண்ணீரை தோட்டம் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதால் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையை கருத்தில் கொண்டே கேன் தண்ணீர் விலையை உயர்த்துவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் இருந்து கூடுதல் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்து இருப்பதால் கேன் தண்ணீர் விலை அதிகமாக உயர்வதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வழக்கமாக சுமார் 1 லட்சம் குடிநீர் கேன்கள் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கேன் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.

ஆனால் கேன் தண்ணீர் தேவைக்கேற்ப தயாரிப்பாளர்களால் சப்ளை செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கேன் தண்ணீர் விலையை உயர்த்தும் பட்சத்தில் அதன் தேவை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.