கல்முனையில் சுமந்திரன் மக்களால் விரட்டப்பட்டார் (காணொளி)

728 0

அம்பாறை கல்முனை போராட்டக்காரர்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது குறித்து பிரதமர் ரணிலின் தகவலை கொண்டு சென்ற அமைச்சர் குழுவினருக்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கல்முனைக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோகணேசன், தயா கமகே மற்றம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கோடிஸ்வரன் ஆகியோர் மக்களால் விரட்டப்பட்டனர்.

பிரதமர் ரணிலிடம் இருந்து வந்த விசேட செய்தியினை குறித்த குழுவினர் அங்கு, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருபவர்களிடம் வாசித்து காட்டினர்.

அதன்பின்னர் அங்கு மக்களுடன் கலந்துரையாடிய மேற்குறித்த அமைச்சர் குழு, ரணிலிடம் இருந்து பெற்றுக்கொண்ட செய்தியையும் தெரிவித்தனர்.

இதன்போது கடும் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள், அவர்கள் சென்ற கார் மீது  செருப்புகளால் தாக்குதல்  மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்குறித்த அமைச்சர்களின் பாதுகாப்பு தரப்பினர் அவர்களை பொதுமக்களின் இடத்தில் இருந்து வெளியேற்றி அழைத்துச் சென்றனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில், தமது போராட்டத்துக்கு உடனடித் தீர்வே வேண்டுமென வலியுறுத்தியுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உரிய தீர்வு கிடைக்கப் பெறாதவிடத்து நஞ்சருந்தி உயிர்துறக்கத் தயாராகவுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்து குருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கல்முனை விவகாரம் 3 மாதத்தில் தீர்க்கப்படும் என, அமைச்சர் வஜிர அபேவர்த்தன அறிவித்துள்ளார்.