சஜித்தை களமிறக்கும் எண்ணம் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடத்துக்கு இல்லை – எஸ்.பி.

205 0

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் எண்ணம் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடத்துக்கு இல்லை என்று ஒருங்கிணைந்த எதிரணி உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போதே பிரதானக் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பாக கண்டியில்  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எஸ்.பி.திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “சஜித் பிரேமதாசவின் பெயரோ, கருஜயசூரியவின் பெயரோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரோ ஜனாதிபதி வேட்பாளருக்காக பரிந்துரைக்கப்படவில்லை.

ஆனால், எனக்கு தெரிந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று மட்டும் விளங்குகின்றது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தற்போது பாரிய எதிர்ப்பலைகளும் எழுந்துள்ளன.

எனவே, இதனால் அடுத்த தெரிவாக கருஜயசூரியவை களமிறக்குவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

இதனைத் தவிர அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்கும் எண்ணம் அந்தக் கட்சிக்கு ஒருபோதும் இல்லை.

சஜித்திடம் அந்தப் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு அந்தக் கட்சியின் தலைவர்கள் எவரும் விரும்பமில்லை என்பதை அறியமுடிகிறது.

எம்மை பொறுத்தவரை யாரை களமிறக்கினாலும் நிச்சயமாக நாம் தோற்கடிப்போம். நாம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாரிய வெற்றியடைவோம் என்பது மட்டுமே உறுதியாகக் கூறமுடியும்.

இதற்காக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சக்திமிக்க ஒருவரை வேட்பாளராக களமிறக்குவோம்.

அந்த வேட்பாளர் யார் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நாம் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்” என மேலும் தெரிவித்துள்ளார்.