மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும்!

470 0

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்றவேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்காக நான் பிரதமருக்கு முதலில் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது துடிப்பான ஆற்றல்மிகு தலைமையின் கீழ் இந்தியா விரைவில் உலகில் உள்ள அதிக வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக திகழும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

மழைநீர் சேகரிப்பு திட்டம் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த திட்டமாகும். இந்த திட்டத்தை அவர் தான் தமிழகத்தில் பிரபலப்படுத்தினார். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து கட்டுமானங்களிலும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் அதனை செயல்படுத்தி வருகிறோம். மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் நாடு தழுவிய ஒரு இயக்கமாக செயல்படுத்த வேண்டும்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,600 நீர்நிலைகளை ரூ.500 கோடி செலவில் சீரமைத்து வருகிறோம். மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கும், நீர்நிலைகளை சீரமைக்கும் திட்டத்துக்கும் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கிட வேண்டும். கோதாவரி ஆற்றில் ஆண்டுக்கு கூடுதலாக 300 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கிறது என்றும், இதை மற்ற தென்னக ஆறுகளுக்கு திருப்பி விடலாம் என்றும் மத்திய நீர்வள ஆணையம் மதிப்பீடு செய்து உள்ளது.

எனவே, ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றை காவிரி ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்திட வேண்டும். நீரை சேமித்து வைக்க 383 தடுப்பணைகளையும், நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் ரூ.736 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். அடிக்கடி வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடியை சிறப்பு நிதி ஒதுக்கீடாக அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவியது. அப்போது விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 247 கோடியும், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.5 ஆயிரத்து 300 கோடி இழப்பீடாகவும் தமிழக அரசு வழங்கியது. வறட்சி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகவே மேற்கொண்டு வருகிறோம். எனவே அதற்கு தேவையான நிதி உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

பேரூரில் 6 ஆயிரத்து 78 கோடியில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டு நிறுவனத்திடம் வாங்கும் கடன் உதவி போக, மீதம் உள்ள ரூ.1,810 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். கழிவு நீரை தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்க ரூ.1,900 கோடி செலவாகும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் நீரை நீண்டகாலம் சேமித்து வைக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.

ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கிட அனுமதி வழங்க வேண்டும். ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் விவசாய திறன் மேம்பாட்டு வளர்ச்சிக்காக தலா ரூ.100 கோடி வழங்க வேண்டும். பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்துக்காக பெண் விவசாயிகள் கட்ட வேண்டிய பிரீமியத்துக்கு 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்கள் அதிகமாக உற்பத்தி ஆகும் இடங்களில் பெரிய அளவிலான குளிர்சாதன கிட்டங்கிகள் அமைக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச ஆதார விலை சில குறிப்பிட்ட பயிர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பெரிய மாநிலங்களில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இந்தநிலையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.500 கோடி வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தலைவாசலில் ரூ.496 கோடி செலவில் ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 50 சதவீத நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்கி வந்தது. இந்த திட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன் அடைய இந்த திட்டத்தை தொடர வேண்டும். இதுபோல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயும், ஒரு லிட்டர் ரூ.15-க்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், தரமான மண்எண்ணெய் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு அளிக்க வேண்டும். கடலோர போலீஸ் படையை மேலும் வலுப்படுத்த ரூ.750 கோடி நிதியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். மீனவர்களுக்கு உதவியாக குளச்சல் அல்லது கன்னியாகுமரியில் நிரந்தர கடற்படை நிலையத்தை அமைக்க வேண்டும்.

ஏற்கனவே சென்னையில் பசுமை விமான தளம் அமைக்கப்படும் என்று எனது அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பசுமை விமான தளம் அமைக்க தமிழக அரசுடன் சமமான அளவில் மத்திய அரசு பங்களிப்பை தரவேண்டும். ஜி.எஸ்.டி. வரியில் தமிழகத்துக்கு தரவேண்டிய ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி நிலுவை தொடர்பாக ரூ.4 ஆயிரத்து 458 கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும். சென்னையில் ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை திட்டத்தை ரூ.3 ஆயிரம் கோடியில் உடனடியாக நிறைவேற்ற நிதி ஆயோக் தேவையான அனுமதி மற்றும் நிதி உதவிகளை வழங்கிட பிரதமர் உத்தரவிட வேண்டும். அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்ற பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள் தொடர்பான 69 பக்க கோரிக்கை மனு ஒன்றை பிரதமரிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.