மைத்திரி- ரணில் ஆகியோரால் ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது – பெரமுன

224 0

நாட்டில் தற்போது  ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது. இவ்விருவரின் செயற்பாடுகளும் முன்னுக்கு பின்  முரனாகவே  காணப்படுகின்றது.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தேர்தலின் ஊடாகவே  தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் ஆகவே தேர்தலை   நடத்த அரசாங்கத்திற்கு  முழு  ஒத்துழைப்பும் வழங்க தயார்  என பாராளுமன்ற உறுப்பினர்   லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குண்டு  தாக்குதல் தொடர்பில்  ஆரா ய  நியமிக்கப்பட்ட  தெரிவு குழுவின் செயற்பாடுகளின் காரணமாக இன்று  நிறைவேற்றுத்துறைக்கும்  சட்டத்துறைக்கும் இடையில்  முரன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலைமை தொடருமாயின்   மீண்டும் அரசியல் நெருக்கடி   நாட்டில்  ஏற்படும். தெரிவு குழுவின்   சாட்சியங்கள் அனைத்தும் தேசிய   பாதுகாப்பினை   கேலிக் கூத்தாக்கியுள்ளது.

தற்போதைய  பிரச்சினைகளுக்கு  ஜனாதிபதி,பிரதமரும் இணைந்தே செயற்பட வேண்டும் ஆனால் நடைமுறையில்  இந்த   ஒற்றுமை இவ்விருவருக்கும் கிடையாது. இருவரும் தொடர்ந்து பொறுப்பற்ற விதமாகவே செயற்படுகின்றார்கள்.  இவர்களால்   முடியாவிடின்  நாட்டு மக்களால் பிரச்சினைகளுக்கு தீர்வை   பெறும் வழிகளையாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.     தேர்தலின் ஊடாகவே   பிரச்சினைகளுக்கு தீர்வை  பெறலாம். இதனை தவிர வேறு  வழிமுறைகள் ஏதும் கிடையாது என அவர் தெரிவித்தார்.