ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது- டில்வின் சில்வா

419 0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவில் முன்வைக்கப்பட்ட தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு அவற்றை திருத்திக் கொள்ள வேண்டிய ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேற்கணடவாறு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதற்கு யார் பொறுப்பு என்று தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு உரிமையுண்டு என தெரிவித்த அவர், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையினால் இந்த விடயம் தொடர்பாக தகவலைப் பெற்றுக்கொள்ளும் மக்களின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்வுக்கு குழுவை நீக்குவதற்கு ஜனாதிபதி முயற்சி செய்கிறார்.

அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் அவரின் குறைபாடுகளை ஒப்புக்கொள்வதோடு, அவற்றை திருத்திக் கொள்வதுதாகும்.

இதேவேளை நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துகொள்ளாததன் மூலம் மஹிந்த தரப்பினரும் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றதாகவே கருத முடிகின்றது.

இந்நிலையில் குறித்த விடயத்திற்கு முழுப்பொறுக் கூறவேண்டிய ஜனாதிபதி ஊடகங்களுக்கு முன்பாக தகவல்களை வெளிப்படுத்துவதை தடுக்கும் முயற்சியானது கவலையளிப்பதாக” டில்வின் சில்வா தெரிவித்தார்.