தமிழகத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.2,857 கோடியில் சுகாதார சீரமைப்பு திட்டம்

341 0
நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ.2,857.003 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக உலக வங்கியின் பங்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1999.902 கோடிகள் தமிழ்நாடு அரசு ரூ.857.101 கோடிகள் கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது.

உலக வங்கி இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டிய நிதியினை நல்க ஒப்புக்கொண்டு அன்று சுகாதார சீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.

தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கிட முடியும்.

தேவையான இடங்களில் மனநல ஆலோசனை மையங்கள் மற்றும் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே உள்ள விபத்து காய சிகிச்சை மையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் மகப்பேறுக்கு பின்னரும் உடல்நலம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மற்றும் வட்ட மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இயக்குநர் கிரண் குராலா, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, உலக வங்கி மேலாளர் ரேகா மேனன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.