தனியார் ஆஸ்பத்திரி பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கி உள்ளனர்.
ஈரோடு சம்பத் நகரில் கல்யாணி கிட்னி கேர் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த ஆஸ்பத்திரியில் தொடர்ந்து போன் கால்கள் வந்த வண்ணம் இருந்தன. அதில் பேசியவர்கள் நாங்கள் கிட்னி தானம் தர தயாராக இருக்கிறோம் நீங்கள் கூறியது போன்று எப்போது பணம் தருவீர்கள் என்று கேட்டுள்ளனர்.
இதனால் ஆஸ்பத்திரி தரப்பு நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது அந்த ஆஸ்பத்திரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி அதில் ஒரு விளம்பரம் செய்திருந்தனர். அதில் கிட்னி தானம் கொடுக்க வருபவர்கள் முன் பதிவு செய்யலாம் அவர் வருவோருக்கு ரூ 3 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன் பணமாக ரூ 10 ஆயிரத்திலிருந்து 15,000 தரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி 500க்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து கல்யாணி கிட்னி கேர் நிர்வாக இயக்குநர் பிரபாகர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் மட்டும் வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த விளம்பரத்தை பார்த்து எத்தனை பேர் ஏமாந்து பணம் செலுத்தி உள்ளனர் என்று தெரியவில்லை. இவ்வாறு கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் ஆஸ்பத்திரி பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கை முடக்கி உள்ளனர்.

