ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை காணப்படுகின்றது – ரட்ணஜீவன்கூல்(காணொளி)

493 0

மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாத கலபொடஅத்த ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை நாட்டில் காணப்படுவதாக தெரிவித்துள்ள பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் இது ஜனநாயகமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் மாவட்ட தேர்தல் செயலகத்தினை புதிதாக அமைப்பதற்கான அடிக்கல்லினை இன்று நாட்டிவைத்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் அனைவரும் எமது பிரதிநிதிகள். நாம் பிரதிநிதிகளை நியமிக்கின்றோம். அவர்கள் பிரதமரை நியமிக்கின்றார்கள். பிரதமர் அமைச்சரவையை நியமிக்கின்றார். இவர்கள் அனைவரும் இணைந்து எமது காரியங்களை செயற்படுத்துகின்றார்கள். இதுதான் முறைமை, இதுதான் ஜனநாயகம். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத கலபொடஅத்த ஞானசார தேரர் என்பவர்தான் அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்குகின்றார். இது ஜனநாயமா? என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இதேபோன்று தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராகிய அத்துரலிய ரத்தின தேரர் உண்ணாவிரதம் இருக்கின்றார். இவை மூலம் இவர்கள்தான் நாட்டை ஆளப்போகின்றார்கள் என்பது புலப்படுகின்றது. எமது பிரதிநிதிகள் பேசுவதற்க்கு இங்கே இடம்கிடைக்கப்போவதில்லை.

தேர்தல் சட்டங்களை இந்த அரசாங்கம் குழப்புகின்றது. தேர்தல்கள் நடைபெறாத வகையில் சூழ்நிலையினை உருவாக்குகின்றது. இதன் ஊடாக ஆளுநர்கள் மாகாணசபையின் அதிகாரங்களை பறித்து தம்வசம் வைத்துக் கொள்கின்றார்கள். மாகாணசபை ஆளவேண்டிய எம்மை ஆளுநர்கள் ஆள்கின்றார்கள். அதிகாரத்தினை பயன்படுத்தி முதலமைச்சர் அலுவலகத்தில் போய் குந்தி இருக்கும் நிலமையும் ஆளுநர் மத்தியில் காணப்படுகின்றது. எமது அதிகாரிகள் முகத்திற்கு நேர கூற பயப்படுகின்றார்கள். ஏன் எனில் ஆளுநரிடம் அடிக்கடி உதவிக்கு சென்று வர வேண்டும் என்ற நிலை அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. தமது அதிகாரங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு இடமளிப்பதன் காரணமாகவே ஜனநாயகம் இல்லாமல் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.