யாழ்.வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை பொருள் , பணம் என்பன பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் வீதி சோதனை நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சந்தேகத்தில் மறித்து சோதனையிட முயன்ற போது ஒருவர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். மற்றையவரை மோட்டார் சைக்கிளுடன் பொலிசார் மடக்கி பிடித்துள்ளனர்.

மடக்கி பிடிக்கப்பட்டவரை பொலிசார் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 500 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் , 4 மில்லி கிராம் கஞ்சா போதை பொருள் , 7 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டது.
அத்துடன் அவர்கள் பயணித்த சுமார் 6 இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் பொலிசார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிசார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை தப்பி சென்ற நபரே வடமராட்சி பகுதியில் போதை பொருள் கடத்தல் சூத்திரதாரி எனவும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

