அமெரிக்காவின் விர்ஜினியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

329 0

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானோர் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இது அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சக குடிமக்களை சிலர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில், விர்ஜினியா மாகாணத்தில் தற்போது ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது விர்ஜினியா  மாகாணம். இங்குள்ள விர்ஜினியா பீச் பிரபலமானது.
அங்குள்ள ஒரு கட்டிட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை பாரபட்சம் காட்டாமல் கண்மூடித்தனமாக சுட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். 6 பேர் காயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்ன காரணத்துக்காக நடத்தினார் என்ற தகவல் வெளியாகவில்லை.