தமிழின அழிப்பும் தொடரும் தமிழர் போராட்டங்களும்.

676 0

                                                                                                                                                                                                                                                                                                 18.5.2019

சிங்கள பௌத்த பேரினவாதமானது பிரித்தானிய அரசிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற நாள்முதல் இன்றுவரை தமிழர்களை அடக்குமுறைக்குட்படுத்தி திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டுவருகின்றது. கடந்த காலத்தில் நடந்த இனக்கலவரங்களில் தமிழர்கள் வகைதொகையின்றிப் படுகொலைசெய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல் என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடூர வடிவங்களின் உச்சக்கட்டமே முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின அழிப்பாகும்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், கைதுகள், விசாரணைகள் என ஒடுக்குமுறைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. இந்நிலையிற்கு புனர்வாழ்வென்ற பெயரில் சித்திரவதை முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளும் விதிவிலக்கல்ல. இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழினத்தையும் தொடர்ந்தும் அச்சமான சூழ்நிலையில் வாழ சிங்கள அரசு நிர்பந்தித்துள்ளது. இதேவேளை போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமலாக்கப்பட்டவர்களும், கைது செய்யப்பட்டவர்களும் எங்கே என்ற கேள்விக்கு விடைதெரியாதநிலையில் தமது உறவுகளைத்தேடி மக்கள் இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்மக்கள் மீது சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களுக்கான தகுந்த ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையில் அதற்கான விசாரணைகள் நடத்தவேண்டும் என அனைத்துலக நாடுகள் எடுத்த தீர்மானத்தை சிறீலங்கா அரசு நிராகரித்திருக்கும் இவ்வேளையில் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றைத் தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது அனைத்துலக நாடுகளின் உதவியை நாடி நிற்பதானது தமிழின அழிப்பை பயங்கரவாத சாயம் பூசி மறைப்பதற்கேயன்றி வேறெதற்குமல்ல.

சிறீலங்கா அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கூலிக்குழுக்கள் 2009 வரை தமிழர்களை அழிப்பதற்கும், அச்சுறுத்துவதற்கும், அவர்களது வாழ்விடங்களை சூறையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. பின்னரான 10 ஆண்டுகளில் சிறீலங்கா அரசின் பேராதரவுடன் இக் கூலிக்குழுக்கள் பெருவளர்ச்சிபெற்று தமிழர்களை இலக்கு வைத்து தொடர்ந்தும் தமிழின அழிப்பை மேற்கொண்டு வருகிறது.

2009ஆம்; ஆண்டின் இறுதிப் போர்க்காலத்தில், அனைத்துலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகள், இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி சிங்களப் பேரினவாதம் நடத்திய கொலைவெறித்தாக்குதல்கள் மூலம் தமிழர்கள் மீது பேரவலத்தைத் திணித்து, தமிழினத்தைப் பலவீனப்படுத்துவதன் விளைவானது தழிழீழத்தை மட்டுமல்ல சிங்களதேசத்தையும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதனை அண்மைக்கால சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன. இனியும் தமிழின அழிப்பு நடைபெறாது தடுக்கவும், நடைபெற்ற தமிழின அழிப்பு, போர்குற்றம் மற்றும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிவிசாரணை நடத்தப்படவும், அனைத்துலக நாடுகளும், மனித உரிமைப் பேரவையும் விரைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

மீண்டும் அவசரகாலத் தடையுத்தரவு கொண்டுவரப்பட்டதன் பிரதான நோக்கம் தமிழ்பேசும் மக்களை அடக்கியாள்வதற்கும், தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை தக்கவைப்பதற்காகவும் என்பதை யாரும் மறுதலிக்கமுடியாது.

அன்பான மக்களே!
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவை நினைவேந்தும் இந்நாளில் சிறீலங்கா அரசும் அதன் பௌத்த பேரினவாத தீவிரப்போக்கும் என்றும் மாறப்போவதில்லை என்பதை கடந்தகால சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. எனவே நாம் மாபெரும் சக்தியாக ஒன்றிணைந்து எமது விடுதலைக்காக போராடவேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்பதைச் சிங்கள தேசமும், அனைத்துலக சமூகமும் வெளிப்படையாக கூறியுள்ளமையானது தமிழீழ விடுதலைப்போரின் நியாயத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் தீர்க்கதரிசன சிந்தனைகளை செயற்படுத்தும் காலம் நெருங்கிவிட்டது என்ற உண்மையினை ஏற்று, முள்ளிவாய்க்கால் முடிவல்ல அது தமிழீழ தேசத்தின் மாபெரும் எழுச்சி என்பதைக்காட்ட உலகெங்கும் உள்ள அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைவோம்.

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.