அமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கு – இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி

93 0

அமெரிக்காவில் வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளி பெண்ணை குற்றவாளி என கூறி நீதிபதி தீர்ப்பளித்தார்.அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் குயின்ஸ் நகரை சேர்ந்தவர் சுக்ஜிந்தர்சிங். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் அஷ்தீப் கவுர் என்கிற மகள் இருந்தாள்.

இந்த நிலையில், தனது மனைவியை பிரிந்த சுக்ஜிந்தர்சிங், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்கிற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் சுக்ஜிந்தர்சிங், ஷம்தாய் அர்ஜூன் மற்றும் அஷ்தீப் கவுர் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி, சிறுமி அஷ்தீப் கவுர் வீட்டின் குளியலறையில் பிணமாக கிடந்தாள். அவள் குளிக்க சென்றபோது, குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய் அர்ஜூன் தெரிவித்தார்.

ஆனால் அஷ்தீப் கவுரை தண்ணீரில் மூழ்கடித்து, கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, ஷம்தாய் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் ஷம்தாய் அர்ஜூன் குற்றவாளி என கூறி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

அத்துடன், அவருக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் 3-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கில் ஷம்தாய் அர்ஜூனுக்கு 25 ஆண்டுகள் முதல் வாழ்நாள்சிறை வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.