வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு உறுதி-மகேஷ் சேனாநாயக்க

274 0

நாட்டில், சில பிரதேசங்களில் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைக்கெதிராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உடனடி தீவிர நடவடிக்கை எடுக்கும் வகையில் படையினரை ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  நேற்றைய தினம் வடமேல் மாகாணத்தில் சிலாபம் முதல் குளியாபிட்டிய ஹெட்டிபொல போன்ற பிரதேசங்கள் வரை இடம் பெற்ற வன்முறை சம்பவங்களின் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமானது இளைஞர்கள் சிலரால் உடமைகள், வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த வகையில் இராணுவத் தளபதியாகிய எனது கோரிக்கையானது இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட முயலுகின்றவர்கள் மற்றும் அரசின் மற்றும் படையணிகளின் சட்ட திட்டங்களை பின்பற்ற மறுப்பர்கள் அனைவருக்கு எதிராகவும் நாங்கள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

மேலும் இது தொடர்பான எனது கருத்து என்னவென்றால், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையான கைது செய்தல் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், இயலுமான வரையிலான அதிகாரத்தை இவ்வாறான அவசர கால சட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கான அதிகாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாங்கள் நாட்டில் இவ்வாறானதோர் வன்முறை சம்பவங்கள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடமளியோம். தயவுசெய்து தாங்கள் இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளவும். அவ்வாறு யாதேனும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் படையினரால் கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு,  நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி வன்முறைகளை ஒழிப்பதற்கு போதிய அளவிலான படையினர் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றனர். அந்த வகையில் நாங்கள் இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையினர், பொலிஸாரை சட்டதிட்டங்களிற்கு அமைவாக நிலமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நியமித்துள்ளோம்.

நான் மிக தாழ்மையுடன் தெரிவிப்பது என்னவென்றால் பிரதேசங்களிலுள்ள இளைஞர்கள் இவ்வாறான வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுதலை முற்றாக தவிர்த்தல் வேண்டும் அத்துடன் படையினர் தமது கடுமையான நடவடிக்கைகளை இச்செயற்பாடுகளுக்கெதிராக மேற்கொள்ளத் தயாரென தெரிவிக்கின்றேன் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.