அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதேபோல், தியாகி கக்கன் குடும்பத்தினரும் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், நல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நகர அபிவிருத்தி கழகம் மூலம் 1953-ம் ஆண்டு, வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் 119 வீடுகள் சி.ஐ.டி. காலனியில் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பொது ஒதுக்கீடு முறையில் வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2004-2005-ம் ஆண்டு இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், வீடுகளை இடித்துவிட்டு, ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்த வாரியம் முடிவு எடுத்தது.
இதற்கிடையே நல்லக்கண்ணுவுக்கு 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர் தமது சொந்த செலவில் கான்கிரீட் பழுதுகளை சரிசெய்தும், கதவு, ஜன்னல் மற்றும் தரை ஓடுகள் ஆகியவற்றை மாற்றம் செய்தும் குடியிருந்து வந்தார்.
வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், 2011-ம் ஆண்டு வீட்டு வசதித் துறை அமைச்சரால் சட்டசபையில், 119 குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குடியிருப்புதாரர் அனைவருக்கும் குடியிருப்பை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸ்களை எதிர்த்து குடியிருப்புதாரர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில், அரசிடம் இருந்து திட்ட ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறும் வரை குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது என 30-11-2011 அன்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, அரசாணை 5-3-2012 அன்று வெளியிடப்பட்டு, மீண்டும் குடியிருப்புதாரர்களுக்கு வீடுகளை காலி செய்ய 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து, பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் ஐகோர்ட்டில் 2012-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள் மீது விசாரணை செய்து, 25-7-2014 அன்று ஐகோர்ட்டு 3 மாத காலக்கெடுவுக்குள் வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டு, மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அதுவும் 31-3-2015 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, 27-4-2015 அன்று நிரந்தர உறுத்து கட்டளை ஆணை பெற்றனர். இந்த வழக்கு தொடர்ந்த நபர்கள் தவிர, மேலும் சிலர் சென்னை ஐகோர்ட்டில் புதிதாக 2016-ம் ஆண்டு வழக்குகள் தொடர்ந்தனர். அதனை 7-2-2017 அன்று தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதன் மீது தொடர்ந்து மேல்முறையீடு மனுவும், 5-2-2018 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கினையும், நிலுவையில் இருந்த வழக்குகளையும் ஒருங்கிணைத்து 5-2-2019 அன்று சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, குடியிருப்புதாரர்கள் வீடுகளை தாமாக முன்வந்து வாரியத்திடம் காலி செய்து ஒப்படைக்க தொடங்கினர். இதுவரை, 96 குடியிருப்புதாரர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளனர். அதில் நல்லக்கண்ணுவும் 11-5-2019 அன்று வீட்டை காலி செய்துவிட்டார். கக்கன் குடும்பத்தினர் இதுவரை வீட்டினை ஒப்படைக்கவில்லை.
சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு, பொது ஒதுக்கீடு முறையில், மாத வாடகைக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக ஐகோர்ட்டின் வழிகாட்டுதலின்படி, புதிய கொள்கை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது. இக்கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன், நல்லக்கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தார் உள்பட இதுபோன்று பொது வாழ்க்கையில் சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு பொது ஒதுக்கீடு அடிப்படையில் மாத வாடகைக்கு வீடுகள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட இருக்கிறது.
நல்லக்கண்ணுவை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் கக்கன் குடும்பத்தினருக்கும் மாற்று ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். துணை முதல்-அமைச்சரும், நல்லக்கண்ணுவிடம், அவர்கள் குடியிருந்த குடியிருப்பு மிகவும் பழுதடைந்து இடிக்கப்படக்கூடிய அவசியம் எழுந்துள்ளதால், நல்லக்கண்ணுக்கும் மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கும் நல்ல முறையில் உள்ள குடியிருப்பு, மாற்று ஒதுக்கீடாக விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

