ஊடகத் தணிக்கை எதுவும் இல்லை – அரசாங்க தகவல் திணைக்களம்

412 0

அரசாங்கத்தால் அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சம்பவங்களை வெளியிடல் தொடர்பாக எந்தவொரு ஊடகத் தணிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் கொண்டு வரப்படவில்லையெனவும் அறிவித்திருக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ , பொது மக்களை தேவையற்ற விதத்தில் குழப்பத்திற்குள்ளாதல் மற்றும் பீதியடையச் செய்தல் என்பவற்றை தடுப்பதற்காக பொலிஸ் மற்றும் முப்படையினரின் ஊடகப்பேச்சாளர்களால் வெளியிடப்படும் அல்லது உறுதிசெய்யப்பட்ட காட்சிகளை மட்டும் ஒளிபரப்புமாறும் வெளியிடுமாறும் மாத்திரமே திணைக்களத்தினால் கோரப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

அரசாங்கத்தால் அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சம்பவங்களை வெளியிடல் தொடர்பாக எந்தவொரு ஊடகத் தணிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவை தொடர்பான காணொளிகளை ஊடகங்களில் ஒளிபரப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலேயே அரசாங்கம் இவ்வறித்தலை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் ஏற்பட்ட துர்பாக்கிய நிலைமையின் காரணமாக அரசாங்க தகவல் திணைக்களத்தால் உறுதி செய்யப்பட்ட தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக நாட்டிலுள்ள அனைத்து வெகுசன ஊடகங்களையும் ஒருங்கிணைந்து பொலிஸ் மற்றும் முப்படையினரின் ஊடகப் பேச்சாளர் உள்ளடக்கி முறையான கட்டமைப்பொன்று நிறுவப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை வெளியிடும் முறைகள் தொடர்பாக ஊடக நிறுவனத் தலைவர்களுடன் கூட்டமொன்று அண்மையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதன் போது பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளை மீள்நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஊடகங்களின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது சுற்றிவளைப்புக்களில் கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகள், கூரிய ஆயுதங்கள் போன்றவற்றின் உறுதிப்படுத்தப்படாத காட்சிகளை ஒளிபரப்புதல் அல்லது வெளியிடுதல் தொடர்பாக கருத்துக்கள் பரிமாற்றப்பட்டதுடன் பொது மக்கள் தேவையற்ற விதத்தில் குழப்பத்திற்குள்ளாதல் மற்றும் பீதியடைவதைத் தடுப்பதற்காக பொலிஸ் மற்றும் முப்படையினரின் ஊடகப்பேச்சாளர்களால் வெளியிடப்படும் அல்லது உறுதிசெய்யப்பட்ட காட்சிகளை மட்டும் ஒளிபரப்புமாறு கோரப்பட்டது.

மேற்படி விடயம் தொடர்பாக தேசிய பொறுப்பைக் கருத்திற் கொண்டு ஊடக நிறுவனங்கள் செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.