புலிகள் மக்களை பாதிக்கும் செயற்பாடுகளை செய்யமாட்டார்கள் – முன்னாள் போராளி அஜந்தன்

381 0

விடுதலைப் புலிகள் மக்களை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கமாட்டார்கள் என விடுதலையான முன்னாள் போராளி அஜந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது என்று தெரிவித்த அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களின் நிலைமை கவலைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி இராசகுமாரன் எனப்படும் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் இன்று காலை விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் விடுதலையான அஜந்தன் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “எனது கைதால் குடும்பம் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை சீர்செய்ய சில காலங்கள் செல்லும். இப்படியான துயரச் சம்பவங்கள் தமிழ் இளைஞர்களுக்கு நடந்துவிடக் கூடாது.

நாங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள். நாங்கள் எமது குடும்பம் சமுகம் சார்ந்த பணிகளில் மட்டுமே ஈடுபடுகின்றோம். அரசாங்கத்திற்கு எதிராகவோஇ வேறு சட்டமுறையற்ற செயற்பாடுகளிலோ நாங்கள் ஈடுபடமாட்டோம்.

எங்கள் மீது தொடர்ச்சியான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் எங்களது இயல்பு வாழ்க்கையினை குழப்பும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

பல்வேறு வேதனைகளுடன் வாழ்க்கைக்குள் காலடிவைத்துள்ள நான் ஓரளவு இயல்பு நிலையினை அடைந்தவரும் போது மீண்டும் எனது வாழ்க்கை பூச்சியத்திற்கு தள்ளப்பட்டுள்ளது” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.