யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை உடனே விடுவிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

545 0


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யாழ் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட அத்துமீறல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவரமுடியாதவாறு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்.

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் ஈழத் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற மனோன் நிலையின் வெளிப்பாடாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இச்செயற்பாட்டினை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமித்த குரலாக கண்டிக்க வேண்டும். யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் மீது கடந்த காலங்களாக தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கெடுபிடிகள் மேற்சொன்ன ஆதிக்க மனோன் நிலையின் வெளிப்பாடு என்பதை மாணவர் தலைவர்களது கைதிற்கு சொல்லப்பட்ட காரணம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தமிழின அழிப்பு நாள் மே 18 – பத்தாவது ஆண்டை தமிழர்கள் குறிப்பாக மாணவ சமூகம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்க தயாராகியுள்ள இத்தருணத்தில் அம்முயற்சிகளை அடக்கும் வகையிலேயே இச்சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பிற்கு தாயகத்திலும் , தமிழகத்திலும் , புலத்திலும் பரிகார நீதியை கோரும் முகமாகவும்,இந் நாட்களில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்காத வலிகளோடு கூட்டு மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகளை தங்குதடையேதும் இன்றி நடத்தும் சூழலையும் அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் பன்னாட்டு சமூகம் உறுதிப்படுத்துமாறு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆக்கிய நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு மாணவர்கள் கைது தொடர்பான தகவல்களை வாழிட நாட்டுகளின் வெளிவிவகார அமைச்சுகளுக்கும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளுக்கும் கவனத்தில் கொண்டுவந்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!