பருத்தித்துறை நகரப்பகுதி சுற்றிவளைப்பு தேடுதல்! மூவர் கைது!

409 0

பருத்தித்துறை நகர பகுதி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் தற்போதுவரை இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

பருத்தித்துறை நகரில் இருந்து வெளியேறும் சகல வாகனங்கள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பருத்தித்துறை மெத்தைக்கடை சந்தியருகே இச்சோதனை நடவடிக்கை நடைபெற்று வருகிறது. மிதிவண்டி முதல் பேருந்தில் செல்பவர்கள் வரை அனைவரையும் இறக்கி அவர்களது உடமைகள் அனைத்தும் அதி தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் பருத்தித்துறை முதலாம் குறுக்குத்தெரு, இரண்டாம் குறுக்குத்தெரு, மூன்றாம் குறுக்குத்தெரு, சந்தைமேற்கு ஒழுங்கை மற்றும் ஓடக்கரை பகுதிகள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடு வீடாகவும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதிகளில் தான் பருத்தித்துறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இசுலாமியர்கள் வாடகைக்கு வீடுகளை எடுத்து தங்கியிருப்பதால் அவர்களை இலக்கு வைத்தே இச் சுற்றிவளைப்பு சோதனை நடைபெற்று வருகின்றது.

சுமார் ஐம்பதிற்கு மேற்பட்ட இசுலாமியர்கள் இவ்வாறு பருத்தித்துறையில் தங்கியிருந்தாலும் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே பதிவிற்குட்பட்டு தங்கியிருப்பது அண்மைய அசம்பாவிதங்களையடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரியவந்திருந்தது. இதையடுத்து இன்றைய சுற்றிவளைப்பு தேடுதலின் போது இவ்வாறு தங்கியிருக்கும் இசுலாமியர்களை புகைப்படம் எடுத்து பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை சந்தை தொகுதி மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இசுலாமியர்களின் வர்த்தக நிலையங்களே விசேட சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டை வைத்யிருக்காத இசுலாமியர் ஒருவர் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் இச்சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை அடுத்து பருத்தித்துறை நகரப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள் : இரா.மயூதரன்.