வடகொரிய தலைவருடன் முதல் சந்திப்பு- விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார் புதின்

319 0

ரஷ்யா வந்துள்ள வடகொரிய தலைவரை சந்தித்து பேசுவதற்காக, அதிபர் புதின் இன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார். 

ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல் முறையாக இன்று ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது சிறப்பு ரெயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து நேற்று (ரஷியா நேரப்படி சுமார் 11 மணியளவில்) விளாடிவோஸ்டோக் நகரை வந்தடைந்தார். 

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் இன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார். தூர கிழக்கு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரிய தலைவர் கிம்மை சந்திக்கும் ஆறாவது தலைவர் புதின் ஆவார். இதற்கு முன்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங், அமெரிக்க அதிபர் டிரம்ப், வியட்நாம் அதிபர் நிகுயென் ஆகியோர் கிம்மை சந்தித்துள்ளனர்