தொடர்குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமை கோரலாம் அமெரிக்கா புலனாய்வு இணையம் தகவல்

719 0

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஆதரிக்கும் இந்தோனேசியக் குழு ஒன்றின் இன்ஸ்ராகிறாம் சமூக ஊடகத்தில், இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடந்த தாக்குதல்களின் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சைட் இன்ரலிஜன்ஸ் குறூப் என்ரப்பிறைஸ் எனப்படும் புலனாய்வு தொழில்முறையாளர்களின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்காணொளிகளுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ள தகவல் குறிப்பில், ‘உங்கள் தேவாலயங்களின் இரத்தம் தோய்ந்த நாட்கள் ஆரம்பமாகியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரிட்டனைத் தளமாகக் கொண்ட டெய்லி மெயில் இணைய ஊடகம், சைட் இன்ரலிஜன்ஸ்; குறூப் என்ரப்பிறைஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரிட்டா கற்ஸ் அம்மையார், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் இலங்கைத் தாக்குதலைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளது.

”தற்கொலைக் குண்டுதாரிகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வாராக” என, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு சமூக ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக, கற்ஸ் அம்மையாரை மேற்கோள்காட்டி, டெய்லி மெயில் இணைய ஊடகம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்கும் தாக்குதலாக, இலங்கைத் தாக்குதல்களுக்குப் பரிமாணம் கொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முற்படலாம் எனவும், ஆயினும் இவை மிக நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டவை எனவும், சைட் இன்ரலிஜன்ஸ் குறூப் என்ரப்பிறைஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரிட்டா கற்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளதாக, பிரிட்டனைத் தளமாகக் கொண்ட டெய்லி மெயில் கூறியுள்ளது.

இந்த அவதானிப்புக்களுக்கு ஊடாக, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இலங்கைத் தாக்குதல்களுக்கு உரிமை கோருவதற்கு தயாராகி வருவது தெரிவதாக, ரிட்டா கற்ஸ் அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளதாக டெய்லி மெயில் குறிப்பிட்டுள்ளது.