சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.

717 0

சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இப் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவிக்கும் தகுதி சிறிலங்கா அரசாங்கத்திற்கு எள்ளளவும் கிடையாது. அதேபோல் சிறிலங்காவில் நடந்த இந்தப் பயங்கரத்தாக்குதலைக் கண்டிக்கும் வெளியுலகத்திற்கு மனிதாபிமானம் என்று ஒன்று இருப்பதாகக் கண்டுகொள்ள முடிகின்றது.

பத்து வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் தமிழ்மக்கள் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட போது கண்மூடியிருந்த சர்வதேச நாடுகளின் இதயங்கள் கசிவதையிட்டு மனமகிழ்ச்சியே. இத்தாக்குதலிலும் அதிகமாகக் கொல்லப்பட்டவர்கள் தமிழ் மக்களே. வணக்க ஸ்தலங்களிலும் பாடசாலைகளிலும், வைத்தியசாலைகளிலும் தங்கியிருந்த தமிழ் மக்களை போர்விமானங்களைக் கொண்டும் பல்குழல் எறிகணைகளைக் கொண்டும் தாக்கி அழித்துவிட்டு, தன் பயங்கரவாத இராணுவத்தை அனுப்பி குற்றுயிராகவும், அங்கவீனர்களாகவும் இருந்த மக்களை ஈவிரக்கமின்றி உயிருடன் புதைத்த சிங்கள அரசிற்;கு இன்றுவரை உறுதுணையாக இருக்கும் சர்வதேச வல்லரசுகளின் இதயம் இப்போது அழுவதையிட்டு அவமானப்படுகின்றோம்.

தாக்குதலில் இறந்த மக்களுக்காக நாடுமுழுவதும் துக்கதினத்தை அறிவித்திருக்கும் சிறிலங்கா அரசிற்கு இச்சிந்தனை வந்ததையிட்டு ஆச்சரியமாக இருக்கிறது. தன் நாட்டு மக்களையே வகைதொகையின்றி வதைசெய்து கொன்று குவித்த பாசிச சிங்கள அரசிற்கு இறந்த மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் அருகதை இல்லை என்றே என்னத் தோன்றுகின்றது. சொந்தங்களின் முன்நிலையில் பேரூந்துகளில் அழைத்துச் சென்ற எம் மக்களை என்ன செய்தோம் என்று சொல்ல வக்கற்ற சிங்கள அரசிற்கு படுகொலைகளைத் தவிர வேறென்ன தெரியும்.

பயங்கரவாத இத்தாக்குதலைக் கண்டிக்கும் ஒவ்வொரு நாடுகளும் சிங்கள அரசாங்கத்தின் அதன் இராணுவத்தின், அதன் அதிகாரிகளின், பயங்கரவாத நடவடிக்கைகளையும் கண்டிக்கவேண்டும். அதற்கான அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவேண்டும்.

இத்தாக்குதல் சம்பந்தமான பல சந்தேகங்கள் இருந்தாலும் சிறிலங்கா அரச பயங்கரவாதிகள் தங்கள் அரசியல் இலக்கை அடைவதற்காக எத்தகைய நாசகாரச் செயல்களையும் செய்வார்கள் என்பது வரலாறு எமக்குக் கூறும் பதிவாக உள்ளது.
இப் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அதே வேளை அவர்தம் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.