ஓட்டுக்கு பணம் பதுக்கல்- விளாத்திகுளத்தில் மண்ணில் புதைத்த ரூ.7½ லட்சம் பறிமுதல்

15 0

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில், விளாத்திகுளத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.7½ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாகி உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு பறக்கும் படையினருடன் சேர்ந்து வருமான வரித்துறையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூரில் நடைபெற்ற சோதனையில் ரூ.11 கோடி பணம் சிக்கியது. சென்னை மற்றும் நாமக்கல்லில் கட்டுமான நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.14 கோடி பணம் பிடிபட்டது.

இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதுபோன்று தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக பல்வேறு இடங்களில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனைக்கு பயந்து பலர் தாங்கள் எடுத்துச் செல்லும் பணக்கட்டுகளை பஸ்களிலும், சாலைகளிலும் விட்டுச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

நேற்று ஒரே நாளில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வருமான வரித்துறையினரும், பறக்கும் படை அதிகாரிகளும் நடத்திய சோதனையில் ரூ.1.16 கோடி சிக்கியது.

கோவில்பட்டி அருகே உள்ள பீக்கிலிப்பட்டி பகுதியில் கலைமணி என்பவரின் தோட்டத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மரத்தின் அடியில் ரூ.7½  லட்சம் மண்ணில் புதைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டி ருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் விளாத்திகுளம் உதவி தாசில்தார் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக இந்த பணத்தை அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எட்டயபுரம் கருப்பூர் பகுதியில் அந்தோணிசாமி என்பவரின் பனை தோட்டத்தில் கருப்பட்டி தயாரிக்கும் குடிசையிலும் பணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. அட்டைப் பெட்டியில் ரூ.68 லட்சத்து 50 ஆயிரத்து 100 பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

49 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தோட்டத்து உரிமையாளர் அந்தோணிசாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், மதுபாட்டில்களையும் அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி மெயின் ரோட்டில் வேகமாக வந்த காரை நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.

இதையடுத்து அந்த காரை பறக்கும் படை அதிகாரிகள் விரட்டி சென்றனர். முதலில் ஊத்தாங்கரைவிளை ரோட்டில் சென்ற கார் பின்னர் மெயின்ரோட்டில் செல்ல முயன்றது. அதனை பறக்கும் படையினர் வழி மறித்து நிறுத்தினர். காரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.40 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

காரில் வந்தது உடன்குடி கொட்டங்காட்டைச் சேர்ந்த வசீகரன், அவரது மகன் அஜீத் என்று தெரியவந்தது. வசீகரன் தி.மு.க. பொதுக் குழு உறுப்பினராக உள்ளார்.

அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.40 லட்சம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணம் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிவகங்கை மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக தகவல் வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த ரூ. 12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மானாமதுரை நாகலிங்க நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் நமச்சிவாயம் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கும் சோதனை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுபேட்டை கிராமத்தில் நடந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரிஷிவந்தியத்தில் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது. பண்ருட்டியில் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரமும் கும்பகோணத்தில் செல்வம் என்பவர் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற ரூ.2 லட்சத்து 5 ஆயிரமும் பிடிபட்டது.

கள்ளக்குறிச்சி அருகே வேங்கைவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றுக்கொண்டிருந்த சிலர் தாங்கள் வைத்திருந்த பையை சாலை ஓரமாக வீசி விட்டு தப்பி ஓடினர். அந்த பையை எடுத்து போலீசார் சோதனை நடத்தியதில் ரூ.70 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது.

பணப்பையை போட்டு விட்டு தப்பி ஓடியவர்கள் யார் என்று விசாரணை நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் எடுத்து சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் வாகன சோதனையில் ரூ.87 ஆயிரம் பிடிபட்டது.

வாழப்பாடி அருகே தினகரன் கட்சி பிரமுகர் வீரமுத்து வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் பணம் எதுவும் பிடிபடவில்லை.

தேர்தல் நெருங்குவதையொட்டி வருமான வரித் துறையினரும், பறக்கும் படையினரும் நடத்தி வரும் இந்த சோதனை நாளையும், நாளை மறுநாளும் மேலும் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

கூட்டுறவு சங்கங்களுக்கான 3-ம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்தது

Posted by - April 28, 2018 0
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கான 3-ம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்தது.

காட்டிக்கொடுத்ததற்காக மாணவி கத்தியால் குத்திக் கொலை!

Posted by - March 9, 2018 0
சென்னையில் கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் உயர் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சரத்குமார் உண்ணாவிரதம்

Posted by - April 25, 2018 0
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை

Posted by - November 2, 2016 0
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாக வரும் – தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை

Posted by - June 14, 2018 0
தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.