எந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்?

213 0

தமிழர்களுடைய புத்தாண்டு நாளாக தை திருநாள் அமைந்த போதிலும் தமிழர்கள் சித்திரை மாதத்தையும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தை மாதத்திற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை சித்திரை மாதத்திற்கு கொடுப்பது மிக குறைவு.

”தை பிறந்தால் வழி பிறக்கும்” என நம்பிக்கையுடன் தை மகளை வரவேற்பார்கள். ‘சித்திரை அப்பன் தெருவிலே’ எனும் பழமொழி உண்டு. அதாவது “சித்திரையில் புத்திரன் பிறந்தால், அக்குடி நாசம்“ என்பது போன்ற மூட நம்பிக்கையும் எம் மக்கள் மத்தியில் உண்டு.

சிரித்திரன் சஞ்சிகை ஆசிரியர் “மாமனிதர்” சி. சிவஞானசுந்தரம் அவர்கள் மகுடியார் பதில்கள் என்று மகுடமிட்டு எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது. வாசகர் ஒருவர் தனது கேள்வியில் “சித்திரையில் புத்திரன் பிறந்தால், அக்குடி நாசம்“ என்கிறார்களே !இது சரியா? எனக் கேள்வி தொடுத்திருந்தார். அதற்கு சிரித்திரன் சுந்தரின் மகுடி பதில் என்ன தெரியுமா?

“ அப்படியாயின் தமிழ் தலைவர்கள் எல்லோரும் சித்திரையிலா பிறந்தார்கள்” என பதிலழிந்திருந்தார்.

சிரித்திரன் சுந்தரின் இந்த பதில் இன்றுவரை தமிழ் இனத்திற்கு பொருத்தமான பதிலாகவே உள்ளது.

தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் இனத்திற்கு எதைத்தான் செய்தார்கள்? என்னதான் செய்யப்போகிறார்கள்.?

ஒவ்வொரு புதுவருடத்திலும் தீர்வை பெற்று தருவோம் என ஆசிச் செய்திகளை அடுக்கடுக்காக வழங்குவார்கள். தேர்தல்கள் காலங்களில் வீரவசனங்கள் பேசி மக்களை உசிப்பி விட்டு வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வார்கள்.

சித்திரையில் கோயில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன . அப்போது அம்மையப்பனான சிவ பெருமான் வீதிகளில் காட்சியளித்துக் கொண்டு வீதியுலா வருவார். அதுவே நாளைடைவில் சில விஷமிகளால் ” சித்திரை அப்பன் தெருவிலே” என தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் தமிழ் இனம் குறிப்பாக ஈழத் தமிழீனம் உலகத்தின் தெருவெல்லாம் நாதியற்று திரிகிறது. எந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்?