கூட்டமைப்பின் அரசியலுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்

5524 0

download (6)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனுக்கு எதிராக யாழ். குடாநாட்டின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.இந்திய நிதியுதவியுடன், புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக கடந்த ஜூன் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் புதல்வியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கலந்துகொண்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது, அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள், விடுவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.எனினும் ஜனாதிபதி அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றமடைந்திருந்ததுடன், மைத்திரி உட்பட நல்லாட்சி அரசாங்கம் குறித்தும் அதிருப்தி அடைந்திருந்தனர்.

அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவரது புதல்வியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார். இந்த நிகழ்வில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே, சரவணபவன், மாவைசேனாதிராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகளை தொடுத்தவாறு இந்த சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment