ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கோரி பேரணி

490 0

38251வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி காமினி மகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த பேரணி, வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்று இறுதியாக மாவட்ட செயலாளரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் வட மாகாண சபைக்கும் மத்திய அமைச்சின் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ ஹரிசன் வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் தலைமையிலான மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் நீடிக்கும் நிலையிலேயே இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட்டின் அழுத்தத்திற்கு அமைய குறித்த மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு வட மாகாண சபையும் கடந்த வாரம் இணக்கம் வெளியிட்டிருந்தது.அமைச்சர் பீ ஹரிசன், குறித்த மத்திய நிலையத்தை மதவாச்சிக்கு கொண்டு செல்ல சதிசெய்துவருவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய வட மாகாண முதலமைச்சர், குறைந்த பட்சம் தாண்டிக்குளத்திலாவது அமைத்துவிடலாம் என்பதற்காகவே இந்த இணக்கத்தை தெரிவித்திருந்தார்.பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான இடத்தை தெரிவுசெய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆய்வு குழுவின் பரிந்துரைக்கு அமைய ஓமந்தையில் அமைப்பதே சிறந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய வட மாகாண சபையும் ஓமந்தையில் மத்திய நிலையத்தை அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தது.ஆனால் ஒமந்தையில் மத்திய நிலையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சர்கள் இருவரும் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் எதிர்ப்பை அடுத்தே தாண்டிக்குளத்தில் அதனை அமைப்பதற்கு வட மாகாண சபை இணக்கம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் மக்கள் அதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், ஓமந்தையில் மத்திய நிலையத்தை அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.எனினும் பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைய பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்குமாறு கோரியே வவுனியா விவசாய சம்மேளனத்தினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த கோரிக்கையை முன்வைத்து வவுனியா விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment