தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தந்தை செல்வாவின் ஜனனதினம் இன்று மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையை எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் தமிழர்களுக்கான தீர்வை எந்த அரசாங்கமும் பெற்றுத்தராது என்பதாலேயே தந்தை செல்வா தமிழீழ கொள்கையைப் பிரகடனப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையில் தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், எனினும் அந்த போராட்டம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் மௌனிக்கப்பட்டாதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்கு, அவர்களின் இடங்கள் அபகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நகர்வுகள் குறிப்பாக கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


