சீன ராணுவத்துக்கு ஆதரவாக கூகுள் செயல்படுகிறதா? டிரம்ப்பை சந்தித்து சுந்தர் பிச்சை விளக்கம்

414 0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று சந்தித்து பேசினார்.

கூகுள் நிறுவனம், சீன ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று சந்தித்து பேசினார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்து பேசியதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது கூகுள் நிறுவனம் சீன ராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவது பற்றியும், அரசியல் சார்பு மற்றும் சீன வியாபாரம் பற்றி இருவரும் பேசியதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். 
“தான் அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே முழு ஒத்துழைப்பு வழங்குவதாக” சுந்தர் பிச்சை தெரிவித்ததாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். “சுந்தருடன் அரசியல் சார்பு பற்றியும் கூகுள் நிறுவனம் நம் நாட்டிற்கு செய்யக் கூடிய பல்வேறு திட்டங்கள் பற்றி பேசினேன். சந்திப்பு மிகச்சிறப்பாக நிறைவுற்றது!” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் சீன ராணுவத்துடன் பணியாற்றவில்லை. நாங்கள் அமெரிக்க அரசு, பாதுகாப்பு அமைச்சகத்துடன் சைபர்செக்யூரிட்டி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வருகிறோம்” என கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். சீனாவில் பல ஆண்டுகளாக கூகுள் முதலீடு செய்து வருகிறது. மேலும் தொடர்ந்து முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சந்தர் பிச்சை தெரிவித்தார்.