சேலத்தில் நாளை ஒரேநாளில் எடப்பாடி பழனிசாமி-மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

224 0

சேலம் மாவட்டத்தில் நாளை ஒரே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர். 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியை அடுத்த கருமந்துறையில் உள்ள விநாயகர் கோவிலில் காலை 9 மணிக்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனது தேர்தல் பிரசாரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.

இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே. சுதீசை ஆதரித்து ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தொடர்ந்து அவர் வாழப்பாடியிலும், அயோத்தியாப்பட்டணத்திலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் அவர் பிற்பகல் 3.15 மணிக்கு தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

மாலை 4 மணியளவில் தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் வாக்கு சேகரிக்கிறார். 5 மணிக்கு நல்லம்பள்ளியிலும், 5.30 மணிக்கு தர்மபுரி டவுனிலும், 6.30 மணிக்கு பென்னாகரத்திலும், 7.30 மணிக்கு பாப்பிரெட்டிபட்டியிலும், 8.30 மணிக்கு பாலக்கோட்டிலும், 9.15 மணிக்கு காரிமங்கலத்திலும் வாக்குசேகரிக்கிறார். இரவில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்குகிறார்.

23-ந் தேதி காலை 9 மணிக்கு வேலூர் மாவட்டம் சேலம் கூட்ரோடு, திருப்பத்தூர், ஆசிரியர் நகர், 10.30 மணிக்கு ஜோலார்பேட்டை, 11.30 மணிக்கு வாணியம்பாடி டவுன், 1.40 மணி முதல் 1 மணி வரை ஆம்பூர் டவுன் உள்பட 4 இடங்கள், மாலை 4 மணிக்கு ஆம்பூர் பைபாஸ், 5 மணிக்கு உமாரபாத், 6மணி பேராணம்பட்டு, 7 மணி குடியாத்தம் பஜார், 7.30 மணி கே.வி.குப்பம், 8 மணி லத்தேரி, 8.30 மணி சித்தூர் பேருந்து நிலையம், 9 மணி வேலூர் புதுமாநகராட்சி, 9.30 மணி மண்டித்தெரு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். இரவில் வேலூரில் தங்குகிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

இதே போல சேலம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

பிற்பகல் 2 மணியளவில் தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்லும் மு.க. ஸ்டாலின் தர்மபுரி மற்றும் அரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

சேலம் மாவட்டத்தில் நாளை ஒரே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதால் அந்த இரு கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.