நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு:2 மகன்களை காப்பாற்றிய துபாய் தொழில் அதிபர்குண்டு பாய்ந்து படுகாயம்

29 0

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் துபாய் தொழில் அதிபர் ஒருவர் தனது 2 மகன்களை காப்பாற்றியுள்ளார்.

துபாயில் வசித்து வரும் ஈராக் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர், அதீப் சமி (வயது 52). இவருக்கு சனா அலாஹர் என்ற மனைவியும், அப்துல்லா (29). அலி (23) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் அப்துல்லாவுக்கு நேற்று பிறந்த நாள். இதற்காக தனது மனைவி மற்றும் இளைய மகனுடன் அதீப் சமி நியூசிலாந்து சென்றார்.
பின்னர் நேற்று தந்தையும், 2 மகன்களுமாக கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதிக்கு சென்றனர். அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்த போது திடீரென்று நுழைந்த பயங்கரவாதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதீப் சமி தனது இரண்டு மகன்களையும் காப்பாற்ற போராடினார். இதற்காக 2 மகன்களையும் தன்னோடு கட்டி அணைத்துக்கொண்டார்.அப்போது பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதில் பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டுகள் அதீப் சமியின் முதுகு பகுதியை துளைத்தன. இதனால் அவரது மகன்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
ஆனால் குண்டு பாய்ந்ததால் படுகாயமடைந்த அதீப் சமி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.