இந்தியாவில் மேலும் 6 அணுமின்நிலையங்கள் – அமெரிக்கா அமைக்கிறது!

243 0

இந்தியாவில் மேலும் 6 அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத்துறையின் கீழ்நிலைச்செயலாளர் ஆண்ட்ரியா தாம்ப்சனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில், இந்தியாவில் 6 அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை பலப்படுத்தவும் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி தெரிவித்துள்ளன” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கோகலே
அதே நேரத்தில் இந்தியாவில் அந்த 6 அணு மின்நிலையங்கள் எங்கே, எப்போது அமைக்கப்படும் என்பது பற்றிய கூடுதலான எந்த தகவலும் அறிக்கையில் இடம் பெறவில்லை.

இந்தியாவில் தற்போது சென்னை கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட 7 இடங்களில் அணு மின்நிலையங்கள் உள்ளன. இவற்றுடன் அமெரிக்காவின் 6 புதிய அணுமின்நிலையங்களும் சேரும்.

இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த 2008-ம் ஆண்டு, சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா 12 நாடுகளுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை அடுத்துத்தான் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, கனடா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஜப்பான், வியட்நாம், வங்காளதேசம், கஜகஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தங்களை செய்தது.

அமெரிக்க ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத்துறை கீழ்நிலைச் செயலாளர் ஆண்ட்ரியா தாம்ப்சனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே சந்திப்பின்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெறுவதற்கு தனது ஆதரவை அமெரிக்கா மறு உறுதி செய்துள்ளது