
ஈராக்கில் பாதுகாப்பு படைகள் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2017-ம் ஆண்டு பிற்பகுதியில் அங்கு தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்கி விட முடியவில்லை.குறிப்பாக ஈராக்கின் கிழக்குப்பகுதியில் தியாலா மாகாணத்தில் இன்னும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த மாகாணத்தின் தலைநகரான பாகுபா நகரில் இருந்து 2 கி.மீ. வட கிழக்கில் உள்ள ஹாவ்த் அல் வக்ப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் ராணுவம், மாகாண அதிரடி போலீஸ் படையினர், துணை ராணுவத்தினர் கூட்டாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சாலையோரங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த தகவல்களை மாகாண கவுன்சில் பாதுகாப்பு குழு தலைவர் சாதிக் அல் உசைனி உறுதி செய்தார்.

