
பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறன், அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். பின்னர் விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், ‘அயோத்தி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முழுமையாக படித்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும். அதேநேரம், பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அயோத்தி பிரச்சினையை அரசியலாக்கிவிடக்கூடாது. ஏன் என்றால் மதவாத சக்திகள் இதைப்பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பார்கள். அதற்கு இடம்தரக்கூடாது. பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வோம்’ என்று கூறினார்.

