தேர்தல் களத்தை சந்திக்க தி.மு.க. ஆயத்தமாகி விட்டது தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

268 0

தேர்தல் களத்தை சந்திக்க தி.மு.க. தயாராகி விட்டது என்றும், நாற்பதும் நமதாகட்டும், நாடு நலம் பெறட்டும் என்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. வரலாற்றில் கருணாநிதி நம்மிடையே இல்லாமல் நாம் சந்திக்கின்ற முதல் தேர்தல் களம் இது. இவ்வளவு பெரிய சுமையைத் தாங்குவது அவ்வளவு எளிதானதா என எண்ணிப் பார்த்தபோது, கருணாநிதி அனுதினமும் அன்புடனும் அக்கறையுடனும் ஊட்டிய ஆழமான கொள்கை உணர்வுடன் நாங்கள் என்றும் உறுதியுடன் இருக்கிறோம் என கோடிக்கணக்கான அவரது தொண்டர்களாகிய நீங்கள் தரும் உற்சாகத்தாலும் தெம்பாலும், உங்கள் இதயம் பெருக காட்டுகின்ற பாசத்தாலும் உங்களில் ஒருவனான எனக்கு இந்த சுமையும் கூட சுகமாகி விடுகிறது.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதைப் போல, ஒருகோடி தொண்டர்கள் உடையான் எந்த சவாலையும் எதிர்கொள்வான், வெல்வான் என்பது தி.மு.க. சொல்லும் உண்மையன்றோ! கருணாநிதி உயிருடன் இருந்தால், இன்றைக்கு நாடு இருக்கும் நிலையில் என்ன முறையில் மக்களவைத்தேர்தல் களத்தை சந்திப்பாரோ அதே வழியில் மத சார்பற்ற மக்கள் நலன் காக்கும் முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, பிரதமர் வேட்பாளர் யார் என்பதைத் தெளிவாக முன்மொழிந்து தேர்தல் களத்தைச் சந்திக்க தி.மு.க. ஆயத்தமாகிவிட்டது.
நமது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டு, அவர்களுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, அந்தந்த கட்சிகளுக்கும் உரிய தொகுதிகளுக்கான பங்கீடு முழுமையாக நடந்து நிறைவேறியிருக்கிறது.
தொகுதி உடன்பாடு தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் ஊர் அடங்கிய பிறகு யாருக்கோ சொந்தமான மர்ம மாளிகையில் திரைமறைவில் நடக்கவில்லை. நட்சத்திர ஓட்டலில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. பொதுக்கூட்ட மேடை ஏறுவதற்கு முன்பாக ஒப்பந்தம் போட்டு எப்படியாவது இழுத்து வந்து மேடையேற்ற வேண்டும் என்று திட்டமிடப்படவில்லை. கட்-அவுட்டை வைப்பதும் எடுப்பதுமாக கேலிக்கூத்துகள் இல்லை. ஏனெனில், தி.மு.க. கூட்டணி என்பது ஊழல் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு ரெய்டு பயம் காட்டி மிரட்டி அமைக்கப்பட்ட செயற்கை கூட்டணி அல்ல. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள மக்கள் விரோத ஜனநாயக விரோத ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கின்ற கூட்டணி. அதனால்தான் நிதானமாகப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. உரிய வகையில் உவப்பான சூழலில் உடன்பாடுகள் ஏற்பட்டன. தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதென ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.
ஜனநாயகம் காக்கின்ற பெரும்பணியில் இருக்கின்ற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் எனும் சுயாட்சிமிக்க அமைப்பு, ஆட்சியாளர்களின் அதிகார மீறல்களுக்கு அடிபணியாது என்கிற நம்பிக்கை இன்னமும் மிச்சமிருக்கிறது. அந்த நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வேண்டும். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் வழங்கவிருக்கும் ஜனநாயகத் தீர்ப்பு மத்தியில் ஆளப் போவது யார் என்பதை தீர்மானிப்பது மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திடமாக இருக்கிறார்கள். தங்களை வாட்டி வதைக்கின்ற மத்திய-மாநில ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கவேண்டும் என்பதில் வேகமாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள்.
கொள்ளையடிப்பதற்காக ஆட்சி நடத்துவோரின் எண்ணத்தை முறியடித்திட, தி.மு.க. மீண்டும் அரியணை ஏறிட, அதன் மூலமாக ஊராட்சிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திட, தமிழ்நாடு செழித்திட தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் உறுதியேற்றுப் பணியாற்றிட வேண்டும்.
20 தொகுதிகளில் தி.மு.க. நிற்கிறது. மீதி 20 தொகுதிகளிலும் தி.மு.க. தான் நிற்கிறது. அந்த சீரிய எண்ணம் தான், கருணாநிதி நமக்கு ஊட்டியுள்ள தோழமை உணர்வு. 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியை எதிர்த்து நிற்பவர்கள் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் அவர்களின் பங்குதாரர்கள். அந்த ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைவதற்கு ஒரு தொகுதியிலும் இடம் கொடுத்துவிடக் கூடாது. அதுபோலவே, சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் 21 தொகுதிகளிலும் நாம் பெறப் போகும் வெற்றி, ஒவ்வொரு வாழ்விலும் உதயசூரியனின் வெளிச்சக் கதிர்களைப் பாய்ச்சப்போகிற வெற்றி. கதிரொளி பாய்ந்தால் வளம் பெருகும். நாடு ஒளி மயமாகும். களம் அழைக்கிறது; காலம் நமக்கானது. கருணாநிதி காட்டிய வழியில் ஈட்டிடுவோம் வெற்றியை, நாற்பதும் நமதாகட்டும், நாடு நலம் பெறட்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.