வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு நெருக்கடி- முக்கிய அதிகாரிகளின் விசாவை ரத்து செய்கிறது அமெரிக்கா

235 0

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில், அந்நாட்டின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட 77 பேரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்ய உள்ளது.

வெனிசுலாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக காய்நகர்த்திய, எதிர்க்கட்சி தலைவர் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பிரகடனம் செய்தார். அத்துடன், அதிபர் தேர்தலில் நிகோலஸ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். 

குவைடோவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் பதிலடி கொடுப்பதாகவும் எச்சரித்தது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த மதுரோ, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார். வெனிசுலாவுக்கு அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 

இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் வெனிசுலா அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்ய உள்ளது. மதுரோ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 77 பேரின் விசாவை அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் ரத்து செய்யும் பணியை தொடங்கியிருப்பதாக, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார். 

மேலும், வெனிசுலாவில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் முழுமையாக மீட்டெடுக்கப்படும் வரையில் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.

இதேபோல் கடந்த வாரம் வெனிசுலா அதிகாரிகள் 49 பேரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.