மசூத் அசார் உயிருடன் தான் இருக்கிறார் – பாகிஸ்தான் செய்தி நிறுவனம்

247 0

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசார் எங்கு இருக்கிறான்? என்பது பற்றி தங்களிடம் எந்த தகவலும் இல்லை என பாகிஸ்தான் அரசு முன்னர் தெரிவித்து வந்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சமீபத்தில் இந்திய விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் எல்லையோரத்தில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இதற்கிடையே, மசூத் அசார் தங்கள் நாட்டில் இருப்பதாகவும், வீட்டில் இருந்து வெளியேவர இயலாத நிலையில் நோய்வாய்ப்பட்டு கிடப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரைஷி சமீபத்தில் தெரிவித்தார்.

அதில், அவர் பாகிஸ்தானில் தான் இருக்கிறார். வீட்டை விட்டு வெளியேவர முடியாத நிலையில், மிகவும் மோசமான உடல்நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் இறந்து போனதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. உளவுத்துறை தகவல்படி, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் மசூத் அசார் ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மசூத் அசார் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமானோர் தெரிவித்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.