சூரியன் இல்லாமல் மாம்பழம் பழுக்காது, தாமரை மலராது- திண்டுக்கல் ஐ.லியோனி

277 0

பாராளுமன்ற தேர்தலில் இலையுடன் சேர்ந்த மாம்பழம் குப்பையில் வீசப்படும் என்று திண்டுக்கல் ஐ. லியோனி பேசியுள்ளார். 

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு சார்பில் சேலம் கோட்டையில் திண்டுக்கல் ஐ.லியோனியின் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் பாபு தலைமை தாங்கினார், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.
இதில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:- 

துரோகம் செய்து ஆட்சியை பிடித்தவர்கள் இன்று மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். சுய மரியாதை என்றால் என்ன என்று கூட இவர்களுக்கு தெரியாது. மேகதாது அணை கட்ட கர்நாடகா ஏற்பாடு செய்கிறது என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால் ஒன்றுமே பேசாமல் இருக்கிறார்.பேசாமல் இருக்கும் நபரால் பெரும் ஆபத்து தான் வந்து சேரும். 
தற்போது ஓட்டுக்காகவும், அதற்கு வேலை செய்பவர்களுக்கும் 2 ஆயிரம் கொடுக்கிறார்கள். தெருவில் வசிக்கும் பிச்சைக்காரர்களுக்கு கூட கிடைக்காது, அடுக்கு மாடியில் இருப்பவர்களுக்கு கிடைக்கும். தி.மு.க.வுடன், பா.ம.க. கூட்டணியில் இருந்த போது அந்த கட்சியை சேர்ந்த அன்புமணி உள்பட 4 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். தற்போது பூ, இலை பழம் என்று மங்களகரமான கூட்டணி அமைந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். ஜனநாயகத்தில் அவர் காணமால் போவார். 

சூரியனின் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் மே மாதம் தான் மாம்பழம் அதிக அளவில் காய்த்து பழுக்கும், சூரியன் இல்லாமல் மாம்பழம் பழுக்காது, சூரிய ஒளியை பார்த்ததும் காலையில் தாமரை மலரும், சூரிய ஒளி இல்லை என்றால் தாமரையும் மலாராது, இலையுடன் சேர்ந்த மாம்பழம் பாராளுமன்ற தேர்தலில் குப்பையில் தூக்கி வீசப்படும். 
தி.மு.க. அனைத்து  கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இடை தேர்தலிலும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்பார். அவர் அடையாளம் காட்டுபவர் தான் பிரதமர் ஆவார். 
இவ்வாறு அவர் பேசினார்.