மாட்டிறைச்சி மீதான வரியை நீக்குங்கள் – சீனாவுக்கு டிரம்ப் வேண்டுகோள்!

270 0

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிற மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி வரியையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று சீனாவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு மேல் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர்.) கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் கூடுதல் வரி விதித்து பதிலடி கொடுத்தது.

அதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள்.

அதில், இருதரப்பு வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்துகிற வகையில், ஜனவரி 1-ந்தேதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்துகொண்டனர். இது 90 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவித்தனர்.

இந்த நிலையில், இப்போது இருதரப்பு வர்த்தக பேச்சு இணக்கமான முறையில் நடைபெறுவதால், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிற மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்ட அனைத்து பண்ணை பொருட்கள் மீதான இறக்குமதி வரியையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று சீனாவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.